Last Updated:
பாரத் ஜோடா யாத்திரையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்ட ஹரியானா காங்கிரஸ் பெண் நிர்வாகி ஹிமானி நர்வால் கொலை வழக்கில், ஆண் நண்பர் கொடுத்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம், ரோத்தாக்-டெல்லி விரைவுச்சாலையில் உள்ள சம்பிலா பேருந்து நிறுத்தத்துக்கு அருகே கடந்த 1ம் தேதி பெரிய நீல நிற சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதை பார்த்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த அதிகாரிகள் சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
23 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் சடலமாகக் கிடந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்த போலீசார், கொலை செய்யப்பட்ட பெண் யார்? கொலையாளி யார்? என சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணையைத் தொடங்கினர்.
அதில் ஹரியானாவே அதிர்ந்து போகும் அளவுக்கு அப்படியொரு அதிர்ச்சிகர தகவல் வெளியானது. கொலை செய்யப்பட்டவர் காங்கிரஸ் கட்சி இளம்பெண் நிர்வாகியான ஹிமானி நர்வால் என்பது தெரியவந்தது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைப்பயணத்தில் அவருடன் நடந்து செல்லும் படங்கள் வெளியாகி வரலானதைத் தொடர்ந்து, அதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இவர்.
இதையும் படியுங்கள் : கர்நாடகா முதல்வராகிறார் டி.கே. சிவக்குமார்? அமைச்சரின் பேச்சால் பரபரப்பு.. மல்லிகார்ஜுன கார்கே மகன் கொடுத்த பதில்
23 வயதான இவர், காங்கிரஸ் கட்சியின் ஹரியானா மாநில இளைஞர் அணியில் பொறுப்பு வகித்தார். இதற்கிடையே அரசியல் முன்பகையால் ஹிமானியை மர்ம நபர்கள் கொலை செய்தார்களோ என்ற சந்தேகம் எழுந்தது. அப்போதுதான் ஹிமானியுடன் பழகி வந்த ஆண் நண்பரான சச்சின் என்பவர் போலீசில் சிக்கினார். பலத்த பாதுகாப்புடன் சச்சினை தனிமையில் வைத்து விசாரிக்க பல அதிர்ச்சிகர தகவல்களை அவர் அளித்துள்ளார்.
ஹிமானியும், சச்சினும் சில காலமாக நெருங்கி பழகி வந்ததாகவும், ஹிமானி தன்னை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததாகவும், தொடர்ந்து பணம் கேட்டு சித்ரவதை செய்ததால் விரக்தியடைந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 27 ஆம் தேதி உறவினர் வீட்டில் தனியாக தங்கி இருந்த ஹிமானியை சச்சின் சந்தித்துள்ளார். அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்தவர், சார்ஜ் வயரால் கழுத்தை இறுக்கி ஹிமானியை கொலை செய்துள்ளார். பின்னர் உடலை பெரிய நீல நிற சூட்கேஸில் போட்டு பைபாஸ் ஓரம் வீசி விட்டு தப்பி சென்றார்.
இக்கொடூர சம்பவம் தெரியவர, சச்சினை கைது செய்த ஹரியானா போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சச்சினுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என ஹிமானியின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கலில் ஆண் நண்பரால் ஹிமானி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
March 03, 2025 5:12 PM IST
ஹரியானாவை உலுக்கிய காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை வழக்கு; ஆண் நண்பர் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்

