பாம்பன் மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அக்கடிதத்தில் இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 6.3.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழக மீனவர்களை அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள மற்றுமொரு சம்பவம் குறித்து மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ள முதலமைச்சர், 2025ஆம் ஆண்டில், கடந்த இரு மாதங்களில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்படுவது இது ஒன்பதாவது முறை என்றும், இன்றைய நிலவரப்படி 227 மீன்பிடிப் படகுகளும், 107 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ளதையும் ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, இலங்கையில் தமிழக மீனவர்கள் நீண்ட காலத்திற்கு சிறை வைக்கப்பட்டிருப்பதோடு, அவர்களை விடுவிக்க அதிகபட்ச அபராதத்தை விதிக்கத் தொடங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், சிறைவாசம், அபராதம் மற்றும் இலங்கை சிறையில் இருக்கும் காலத்தில் ஏற்படும் வருமான இழப்பு போன்ற துன்பங்களுக்கும் அப்பால், அவர்களின் பொருளாதாரத்திற்கு உதவுக்கூடிய ஓரே ஆதாரமாக விளங்கும் அவர்களின் படகுகளையும் இலங்கை அரசு திருப்பித் தராததால், தமிழக மீனவர்கள் தற்போது தங்களது வாழ்வாதாரத்தில் பெரும் பொருளாதார இழப்பை எதிர்கொண்டுள்ளனர் எனத் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
