யுஜிசியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் யுஜிசி வெளியிட்ட விதிமுறைகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
யுஜிசி இந்த விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஜன. 9 அன்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 9.1.2025 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலினை இணைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு இன்று (20-1-2025) கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
‘பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும்வகையில் இக்கடிதத்தை எழுதுவதாகவும், வரைவு நெறிமுறைகளில் உள்ள பல விதிகள் மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன என்றும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரைவு யுஜிசி (இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள்) – நெறிமுறைகள் 2024 தொடர்பான கவலைக்குரிய சில முக்கிய விதிகள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
i. இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்துதல்
பொது நுழைவுத் தேர்வுகளுக்கான முன்மொழிவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல்வேறு கவலைகளை எழுப்புகிறது எனக் குறிப்பிட்டுள்ள முதல்வர், மாநில மற்றும் தேசிய கல்வி வாரியங்களால் வலுவான இறுதித் தேர்வுகள் மூலம் மாணவர்களின் கல்வித்திறன் ஏற்கெனவே முறையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆதலால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது தேவையற்றதும், சுமையாகவும் அமைந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நுழைவுத் தேர்வுகள் மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்துவதுடன் நிதிச்சுமையையும் ஏற்படுத்தி சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியில் கவனம் செலுத்தக்கூடும், இது பள்ளிக்கல்வியின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும். தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் (GER 47%) ஏற்கெனவே நாட்டிலேயே முதன்மையாக உள்ளது எனவே, நுழைவுத் தேர்வுகள் நிச்சயமாக பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்விக்கான சேர்க்கையைக் குறைத்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள மாறுபட்ட கல்வி முறைகள் மற்றும் அமைப்புகளைக் கருத்தில்கொண்டு நாடு முழுவதும் ஒரே விதமான நுழைவுத் தேர்வு என்பது நடைமுறைக்கு ஒவ்வாது என்பதுடன், இது மாநில சுயாட்சியை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.
மாணவர்கள் தங்கள் மேல்நிலைப்பள்ளி பாடப்பிரிவைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு பட்டப்படிப்பையும் தொடர அனுமதிக்கும் முறை என்பது போதுமான அடிப்படை பாட அறிவு இல்லாமல் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்குத் தேவையற்ற கல்வி அழுத்தத்தை உருவாக்கும். எனவே, மேற்கூறிய காரணங்களுக்காக, இளங்கலை, முதுகலை சேர்க்கைகள் தனி நுழைவுத் தேர்வைவிட பள்ளி இறுதித் தேர்ச்சி மற்றும் இளங்கலை மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
