‘லால் சலாம்’ படத்தில் நடித்தாலும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு சங்கி தான் என கன்னட நடிகர் சேத்தன் அஹிம்சா விமர்சனம் செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் ராமர் கோயில் சென்று வந்துள்ளார். இந்த செயலே சங்கி போலத் தெரிகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

’லால் சலாம்’ பட பூஜையில் ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் `லால் சலாம்’. இப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் கபில்தேவ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. நட்பு மற்றும் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் `மொய்தீன் பாய்’ என்ற வேடத்தில் நடிக்கிறார்.

ரஜினிகாந்துடன் ஐஸ்வர்யா…
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா பேசுகையில், ” என் அப்பாவை சங்கி என்று யாராவது சொன்னால் எனக்கு கோபம் வரும். அவர் ஆன்மிகவாதி மட்டுமல்ல, மனிதநேயவாதி. ஒரு சங்கியால் ‘லால்சலாம்’ போன்ற படங்களில் நடிக்க முடியாது” எனக் கூறினார். இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

லால் சலாம் படத்தில் ரஜினி, விஷ்ணு விஷால்
இதுகுறித்து ஜன.29-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி கொடுத்தார். அப்போது, “ ’லால்சலாம்’ படம் நன்றாக வந்திருக்கிறது. அப்படம் மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும். சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று யாரும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மிகவாதி, அவரை ஏன் அப்படி எல்லாரும் கூறுகிறார்கள் என்றுதான் என் மகள் ஐஸ்வர்யா வேதனைப்பட்டார். அவர் சரியாகவே பேசியுள்ளார்” என்றார் ரஜினிகாந்த்.

நடிகர் சேத்தன் அஹிம்சா
இந்த நிலையில் கன்னட நடிகர் சேத்தன் அஹிம்சா, ரஜினியை சங்கி என விமர்சனம் செய்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் எக்ஸ் தள பதிவில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் தனது தந்தையை சங்கி இல்லை என்கிறார். ‘லால்சலாம்’ படத்தில் ஒரு சங்கியால் நடிக்க முடியாது என்று கூறியது நம்பும்படியாக இல்லை.
கடந்த 2014, 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் மோடியை ரஜினிகாந்த் பலமுறை சந்தித்துள்ளார். அவர் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் ராம் மந்திரில் (அயோத்தி) கலந்து கொண்டது சங்கி போலத் தெரிகிறது.
நடிகர்கள் பணத்திற்காகவும். வேலைக்காகவும் தான் திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். ரஜினிகாந்துக்கு திரையில் சித்தாந்தம் முக்கியமா என்றும் சேத்தன் கேள்வி எழுப்பியுள்ளார். ‘லால் சலாம்’ படத்தில் நடித்தாலும் ரஜினி ஒரு சங்கிதான் என்று சேத்தன் அஹிம்சா கூறியுள்ளார். அவரது ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.
இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய ட்விட்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாக நடிகர் சேத்தன் அஹிம்சாவை கடந்த ஆண்டு மார்ச் மாதம் போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


ரஜினிகாந்த் சங்கீயா இருந்தா என்ன இல்லாவிட்டால் தான் என்ன மொத்தத்தில் ரஜினிகாந்த் ஒரு பயந்தாங் கொள்ளி. இவரைப் பற்றிய விமர்சனங்கள் அனைத்துமே தேவையில்லாதது