சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, நியூசிலாந்து அணி முதலில் விளையாடியது.
252 ரன்கள் இலக்கு
நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். இந்த இணை நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், வில் யங் 15 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின், ரச்சின் ரவீந்திராவுடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திராவின் விக்கெட்டினை முதல் பந்திலேயே வீழ்த்தினார் குல்தீப் யாதவ்.
