பாஜக மத்தியில் 2019-ல் ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களில், நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியது. பின்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் விரைவாக சட்டமாகவும் மாற்றப்பட்டது. இதன் சாராம்சம் என்பது, `பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் குடியேறிய இந்து, பௌத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம், சீக்கிய மதத்தவர்கள் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் இங்கு தங்கியிருந்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும்” என்பதுதான்.
இதில், முஸ்லிம் மதம், அண்டை நாடான இலங்கை ஆகியவை விடுபட்டது மக்களிடமிருந்தும், பல மாநில கட்சிகளிடமிருந்தும் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது. இருப்பினும், குடியுரிமை திருத்த சட்டத்தை நான்காண்டுகளாக அமல்படுத்தாமலிருந்த பா.ஜ.க அரசு, கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பு இந்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தது.
