Last Updated:
Shashi Tharoor | வெளிநாடு செல்லும் குழுவில் சசி தரூர் பெயரை காங்கிரஸ் கட்சி பரிந்துரைக்க மறுத்ததும், மத்திய அரசு அவரை தலைமை தாங்க சொன்னதால், அரசியல் தளத்தில் புதிய யூகங்களை கிளப்பியுள்ளது.
தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவு அளிப்பது குறித்து உலக நாடுகளுக்கு விளக்கும் குழுவை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமை தாங்கும் நிலையில், இதில் அரசியல் இல்லை என்று சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த மாதம் 22-ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர்கள் 25 பேரும், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து வெளிநாடுகளுக்கு சென்று விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்களைக் கொண்ட 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுக்களில் இடம்பெறச் செய்வதற்காக 4 எம்.பி.,க்களின் பெயர்களை அனுப்ப காங்கிரஸை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இதன்படி ஆனந்த் சர்மா, கவுரவ் கோகாய், சையத் நாசர் உசேன், அம்ரிந்தர் சிங் ராஜா ஆகியோரின் பெயர்களை காங்கிரஸ் பரிந்துரைத்தது. ஆனால் எம்பிகளின் குழு ஒன்றுக்கு காங்கிரஸால் பரிந்துரைக்கப்பட்ட சசி தரூரை தலைவராக மத்திய அரசு நியமித்தது. சசி தரூரை மத்திய அரசு நியமித்திருப்பதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் எம்.பி.,க்கள் குழுவை வழிநடத்தும்படி மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தம்மை கேட்டுக்கொண்டதாகவும், இதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் சசி தரூர் கூறியுள்ளார்.
இருப்பினும் வெளிநாடு செல்லும் குழுவில் அவர் பெயரை காங்கிரஸ் கட்சி பரிந்துரைக்க மறுத்ததும், மத்திய அரசு அவரை தலைமை தாங்க சொன்னதால், அரசியல் தளத்தில் புதிய யூகங்களை கிளப்பியுள்ளது.

