குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோல்ட்ரிஃப் சிரப் தயாரிப்பாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) பரிசீலனை செய்து வருகிறது. தமிழக உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இதற்காக அறிவுறுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.
கோல்ட்ரிஃப் சிரப்புகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 11 குழந்தைகள், தமிழ்நாட்டில் 9 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), இந்தியா முழுவதும் பல மாநிலங்களின் மருந்து உற்பத்தி அலகுகளில் ஆபத்து அடிப்படையிலான ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது.
இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், குஜராத், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மருந்துகள் பரிசோதிக்கப்படுகின்றன. இருமல் சிரப்புகள், காய்ச்சல் மருந்துகள் மற்றும் ஆன்டிபயாடிக்குகள் உட்பட 19 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
சிந்த்வாரா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் குழந்தைகள் இறப்புக்கான காரணத்தை பரிசோதிக்க, தேசிய வைராலஜி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) மற்றும் நாக்பூர் எய்ம்ஸ் (AIIMS) ஆகியவற்றின் நிபுணர்கள் சேர்ந்து அதன் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.
மேலும், மத்திய சுகாதார செயலாளர், அனைத்து மாநிலங்களின் முதன்மை செயலாளர்கள், சுகாதார செயலாளர்கள் மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர்களுடன் வீடியோ மூலம் பேசி, சிரப்புகள் மற்றும் மருந்துகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விவாதிக்க உள்ளனர்.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) சோதனை செய்த ஆறு மாதிரிகளில் டைஎதிலீன் கிளைகோல் (DEG) மற்றும் எத்திலீன் கிளைகோல் (EG) ஆகிய நச்சுப் பொருட்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேச உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பரிசோதித்த மூன்று மாதிரிகளிலும் டைஎதிலீன் கிளைகோல் அல்லது எத்திலீன் கிளைகோல் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ஆய்வுக்குட்பட்ட மாதிரிகளில் கோல்ட்ரிஃப் சிரப் இடம்பெறவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், கோல்ட்ரிஃப் சிரப்புகளின் விற்பனையை தடைசெய்துள்ளன. மக்கள் இந்த தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டாம் என்று பொதுவான எச்சரிக்கையை தெலங்கானா அரசு வெளியிட்டுள்ளது.
October 06, 2025 4:01 PM IST
