2022 ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று கவனம் ஈர்த்த ஸ்வீட்டி பூரா, அடுத்த ஆண்டே உலக சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை முத்தமிட்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
அதேவேளையில், 2014 ஆம் ஆண்டு ஆசிய கபடி போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணியிலும், 2016 ஆம் ஆண்டு தெற்காசிய போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்தவர் தீபக் நிவாஸ் ஹூடா. ஹரியானாவை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை ஸ்வீட்டிக்கும், கபடி வீரர் தீபக் ஹூடாவுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
ஓராண்டுக்கு மேலாக இல்லற வாழ்வு இனிமையாக கடந்த நிலையில், அண்மையில் தம்பதி இடையே மோதல் வெடித்துள்ளது. வீட்டிற்குள் புகைந்த புகைச்சல் வீதிக்கு வந்ததால், விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது. தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் ஹிசார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஸ்வீட்டி பூரா. மேலும், கொடுமை தாங்க முடியாமல் விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக 3 முறை சம்மன் அனுப்பியும், தனது உடல்நிலையை காரணம் காட்டி தீபக் ஹூடா காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில், ஹிசார் காவல் நிலையத்தில் அவர், தனது குடும்பத்தினருடன் ஆஜராகியுள்ளார். ஸ்வீட்டியும் தனது குடும்பத்தினருடன் காவல்நிலையம் வந்தார். போலீசார் முன்னிலையில் இரு தரப்பினரும் சமாதானம் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது, தீபக் ஹூடா தனது மனைவி மீது குற்றம் சாட்டியதாக தெரிகிறது.
Boxer Sweety Bora is practising her boxing on her husband.#feminism #MenToo pic.twitter.com/nsKxWeNbG9
— Mayank Burmee (@BurmeeM) March 25, 2025
இதனால், பொங்கி எழுந்த ஸ்வீட்டி, தான் குத்துச்சண்டை முன்னாள் உலகச் சாம்பியன் என்பதை நினைவுபடுத்தும் வகையில், கணவரின் கழுத்தை பிடித்து தாக்கியுள்ளார். தொடர்ந்து ஆவேசமடைந்த அவர், கும்மாங்குத்து விட்டு, காவல் நிலையத்தைக் குத்துச்சண்டை களமாக்கினார்.
இதையும் படிக்க: சென்னையை அலறவிட்ட கொள்ளையர்கள்.. நள்ளிரவில் என்கவுன்ட்டர் செய்த போலீஸ்.. நடந்தது என்ன?
உடனே குடும்பத்தினர் குறுக்கிட்டு சண்டையை விலக்கி விட்டனர். இருந்த போதும், வளைய வளைய வந்த ஸ்வீட்டி, கணவரை தாக்க முற்பட்டார். பின்னர், போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். காவல் நிலையத்தில் கணவன் – மனைவி மல்லுக்கட்டிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அதற்கு கணவர் தீபக் ஹூடா தான் காரணம் என்று ஸ்வீட்டி தெரிவித்துள்ளார். விளையாட்டு மைதானத்தில் எதிராளிகளுக்கு எதிராக போராடிய இருவர், தற்போது வாழ்க்கை துணைக்கு எதிராக போராடி நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது அரியானாவில் பேசுபொருளாகியுள்ளது.
March 26, 2025 11:44 AM IST
காவல்நிலையத்தில் வைத்து கணவரை தாக்கிய குத்துச்சண்டை வீராங்கணை ஸ்வீட்டி பூரா..! சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!
