Last Updated:
மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இன்று காலை 11 மணிக்கு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பேசப்பட்டதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து அறிவித்தார். அவர் கூறியதாவது, “பஹல்காம் தாக்குதலுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஷில்லாங் முதல் சில்சார் வரையிலான நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு ரூ.22,864 மதிப்பீட்டில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2025-26 பருவத்திற்கு கரும்புக்கான நியாயமான மற்றும் லாபகரமான விலையை ரூ.15 உயர்த்தி குவிண்டாலுக்கு ரூ.355 என அமைச்சரவை அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2021ல் நடக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாநில அளவில் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை. மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசின் வரம்பில் தான் வரும். மாநிலங்கள் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் குழப்பம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.
April 30, 2025 4:42 PM IST

