ஆண்டுதோறும் சென்னையில் இருக்கும் மியூசிக் அகடமி தரப்பில் சங்கீத கலாநிதி விருது அளிக்கப்படுவது வழக்கம். கர்நாடக இசை துறையில் ஒருவர் ஆற்றிய பங்கை பொறுத்து விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணாவிற்கு வழங்கப்பட்டது. எனவே இந்த ஆண்டு மியூசிக் அகாடமி மாநாட்டை அவர் தலைமை தாங்குகிறார்.
ஆனால் டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்கப்பட்டதன் காரணமாக இசைக்கலைஞர்கள் ரஞ்சனி – காயத்ரி இந்த ஆண்டு மாநாட்டை புறக்கணிப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இவர்களின் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் மியூசிக் அகடமி தலைவர் முரளி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில், “மார்ச் 20, 2024 அன்று உங்களது கடிதத்தைப் பெற்றேன், அதில் தேவையற்ற கூற்றுக்கள், அவதூறுகள் கருத்துக்களை மரியாதைக்குரிய மூத்த சக-இசைக்கலைஞருக்கு எதிராக அதன் மோசமான தொனியுடன் நிரம்பி இருந்தது. அந்த அறிக்கை எனக்கு அதிர்ச்சி அளித்தது.
1942-ஆம் ஆண்டு தி மியூசிக் அகாடமியால் நிறுவப்பட்ட சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசையின் மிக உயரிய விருது என்பதை நீங்கள் அறிவீர்கள். சங்கீத கலாநிதியின் தேர்வு ஆண்டுதோறும் மியூசிக் அகாடமியின் தனிச்சிறப்பாகும், மேலும் இது எப்போதும் கவனமாக ஆலோசித்த பின்னரே தீர்மானிக்கப்படுகிறது. இசை துறையில் நீண்ட காலம் பங்காற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அகாடமியின் செயற்குழு டி.எம். கிருஷ்ணா தனது இசை வாழ்க்கையில், இசையில் சிறந்து விளங்கியதன் அடிப்படையிலான தேர்வாகும். வெளிப்புற காரணிகள் எதுவும் எங்கள் தேர்வை பாதிக்கவில்லை.
நீங்கள் விரும்பாத, தகுதியற்ற, மோசமான ரசனை கொண்டதாக நீங்கள் கருதும் ஒரு இசைக்கலைஞரை அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளதன் காரணமாக வரவிருக்கும் சங்கீத அகாடமி மாநாட்டில் இருந்து விலகுவதற்கான உங்கள் முடிவை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம். நீங்கள் எனக்கும் அகாடமிக்கும் அனுப்பிய கடிதத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளீர்கள், இது ஒழுக்கத்திற்கு மாறான நடவடிக்கையாகும். மேலும் உங்கள் கடிதத்தின் நோக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது.
பொதுவாக, நீங்கள் என்னிடமும், அகாடமியிடமும் தெரிவிப்பதற்கு முன்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதால், அதற்கான பதிலை நாங்கள் அளிக்கத் தேவையில்லை. ஆனால், கர்நாடக சங்கீதத் துறையில் நீங்கள் ஆற்றிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கான பதில் அளிப்பதை, நான் மறுக்க விரும்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சனி, காயத்ரியின் ம்யூசிக் அகாடமி மாநாட்டை புறக்கணிக்கும் முடிவைக் குறித்து பதிவுகள் இடும் நெட்டிசன்ஸில், ”அப்பட்டமான சாதி உணர்ச்சியையும், வெறுப்பையும் இந்த சகோதரிகள் வெளிப்படுத்துகிறார்கள்” ஒரு தரப்பும், ”இது நல்ல முடிவு” என ஒருதரப்புமாக, கண்டனங்களும், ஆதரவும் இவர்களுக்குக் குவிகின்றன.


கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை