Last Updated:
அரசியலமைப்பு தான் நாட்டின் உச்சம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.
அரசியலமைப்பு தான் நாட்டின் உச்சபட்சம் என்றும், நாடாளுமன்றம் உள்ளிட்ட மற்ற ஜனநாயக அமைப்புகள் அதன் கீழ் இயங்கும் பிரிவுகள் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற விழாவில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நாடாளுமன்றம் தான் நாட்டின் உச்சம் என சிலர் எண்ணுவதாகவும், தன்னைப் பொறுத்தவரை, அரசியலமைப்பு தான் நாட்டின் உச்சம் என்றும் கூறினார். நாடாளுமன்றம் உள்ளிட்ட ஜனநாயகத்தின் மற்ற மூன்று தூண்கள் அரசியலமைப்பின் கீழ் இயங்கும் பிரிவுகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் திருத்தம் கொண்டுவர நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகக் கூறிய பி.ஆர்.கவாய், அதனால் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது என்றார்.
அரசுக்கு எதிராக உத்தரவிடுவதன் மூலம் மட்டுமே சுதந்திரமாக செயல்படுவதாக நீதிபதிகள் கருதக்கூடாது எனக் கூறிய அவர், பொது மக்களின் அடிப்படை உரிமைகள், அரசியலமைப்பின் மதிப்பு மற்றும் கொள்கைகளை பாதுகாக்கும் கடமை தங்களுக்கு இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
மக்கள் தங்கள் தீர்ப்பை பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை பொறுத்து நீதிபதிகள் செயல்படக் கூடாது எனக் கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சுதந்திரமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.
உத்தர பிரதேச அரசின் புல்டோசர் நடவடிக்கை குறித்த தனது தீர்ப்பை மேற்கொள்காட்டி பேசிய அவர், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை தான் எப்போதும் ஆதரிப்பதாக கூறினார்.
June 26, 2025 2:30 PM IST

