ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தாங்கள் ஆட்சி செய்யும், வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறி வருகிறார்.
பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கான தரவுகளையும் வெளியிட்டுவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, மக்களின் பொருளாதாரம், சமூகம், கல்வி, வாழ்வாதாரம் ஆகிய முதன்மையான தரவுகளைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் ஸ்ரீனிவாச வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இது விளிம்புநிலை சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் சமூக அதிகாரத்தை உயர்த்தவும் உதவும் என்று முதல்வர் கூறியதாகக் குறிப்பிட்டார்.

