“கட்டடம் அனுமதியற்றதாக இருந்தால் இடிக்கப்படலாம். ஆனால் அதற்கு நெறிமுறைகள் தேவை. நீங்கள் நகராட்சி விதிமுறைகளை கடைப்பிடிக்கவிட்டால்தான் இடிப்பதாகக் கூறுகிறீர்கள். இப்போது அதற்கான வழிகாட்டுதல்கள் தேவை, ஆவணப்படுத்தப்பட்ட நடைமுறைகளைத்தான் பின்பற்ற வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
“ஒரு கட்டடம் இடிக்கப்படுவதற்கு முன்னர் நோட்டீஸ் அளித்து, அதற்குப் பதிலளிக்க அவகாசம் கொடுங்கள். சட்டப் பூர்வ தீர்வுகளைத் தேட நேரம் கொடுங்கள் அதன்பிறகு இடிக்கலாம்” எனக் காட்டமாகத் தெரிவித்தார் நீதிபதி கே.வி.விஸ்வநாதன்.

“நாங்கள் சட்டத்தை மீறிய கட்டடங்களைப் பாதுகாக்கவில்லை, அது கோயிலாக இருந்தாலும் சரி. ஆனால் இடிப்பதற்கு முன் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கறிஞர் சியு சிங் டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடந்த சம்பவத்தை மேற்கோள்காட்டினார். வாடகைக்கு இருப்பவர்கள் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருந்ததால், வீடுகள் இடிக்கப்பட்டன. உரிமையாளரின் மகனுக்குக் குற்றச் சம்பவத்தில் தொடர்பிருந்ததால் 50-60 ஆண்டுகள் பழமையான வீடுகள் இடிக்கப்பட்டன. என வாதாடினார்.
ஒரு மகனின் தவற்றுக்காக வீடு இடிக்கப்படுவது சரியான அணுகுமுறை அல்ல என கே.வி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
புல்டோசர் நீதி என்பது கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்படுவது அதிகரித்து வருவதைக் குறிக்கிறது. சில சம்பவங்களில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் முன்பே புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் செய்யும் தவற்றுக்காக எப்படி மொத்த குடும்பத்தையும் அரசு தண்டிக்க முடியும் எனக் கேள்விகள் எழுகின்றன!
