கடந்த சில வாரங்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அன்றாடம் தவறாமல் இடம்பெறும் ஒரு செய்தி… விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள். இவற்றின் திடீர் அதிகரிப்பால் அண்மைக் காலமாக ஏராளமான விமானங்கள் திருப்பி விடப்படுவதும், சில ரத்து செய்யப்பட்டு பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவதும் தொடர் கதையாகி வருகின்றன.
ஒரு வாரத்தில் மட்டும் இந்திய விமான நிறுவனங்களுக்கு 90 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. அதற்கும் மேல் கடந்த ஜூன் மாதம் ஒரே நாளில் மின்னஞ்சல் வழியாக வந்த 41 மிரட்டல்களால் பல விமானங்கள் தாமதமாகின.
இந்திய விமான நிலையங்களுக்கு இப்படியான வெடிகுண்டு மிரட்டல்கள் புதிதல்ல. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2017 வரை மொத்தம் 120 மிரட்டல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதில், நாட்டின் பெரிய விமான நிலையங்களான மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களுக்கு வந்த மிரட்டல்கள் பாதிக்கும் அதிகம். எனினும் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வந்து கொண்டிருக்கும் மிரட்டல்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.
