மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சந்தீப் தீக்ஷித், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கணிசமான வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. “வோட் ஃபார் டெமாக்ரசி’ என்ற அமைப்பின் ஆய்வறிக்கையின் படி, தலைமைத் தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் முதலில் கூறியதற்கும், பின்னர் அளித்த இறுதி புள்ளிவிவரங்களுக்கும் இடையே சராசரியாக 4.7 சதவீதம் வித்தியாசம் உள்ளது. இது தேசிய அளவில் சுமார் 5 கோடி வாக்குகளாகும்.
ஒடிஸா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 12.5 சதவீதம் வரை வித்தியாசம் உள்ளது. லட்சத்தீவு உள்ளிட்ட சில இடங்களில் 25 சதவீதம் வரையிலும் பெரிய வித்தியாசம் இருப்பது தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.
