பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி, சூரிய சக்தி மின்சாரத்தை இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக, 250 மில்லியன் டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க வழக்கறிஞர்களால் சமீபத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. இதில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
மறுபக்கம், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை வந்த அதானி, முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து இதுதொடர்பாக பேசியதாகத் தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. குறிப்பாக, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிப் பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் அதானியை முதல்வர் சந்திக்கவேயில்லை என்றும், அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை எனவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியை மீண்டும் அட்டாக் செய்துள்ள அண்ணாமலை, “அதானி நிறுவனத்துக்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார்கள்’ என்றும், ‘உண்மையில் அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய மொத்தக் கட்டணம் என்ன என்பதை, ஜாமீன் அமைச்சர் வெளிப்படையாகத் தெரிவிப்பாரா? அமைச்சர் கூறும் ரூ. 568 கோடி என்பதன் கணக்கு விவரங்கள் என்ன?’ என்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நலன் சார்ந்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியது திமுக அரசின் கடமை. வழக்கு தொடர்வோம் என்ற, ஜாமீன் அமைச்சரின் உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பா.ஜ.க பயப்படாது.
சிறையிலிருந்து வெளிவந்து அமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல், இரவு, பகல் எனக் கால நேரம் பாராமல், தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு, சங்க காலப் பாடல் வரிகளை சமூக வலைத்தளங்களில் புகழ்பாடிக் கொண்டிருந்த ஜாமீன் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களுக்கு, தற்போதுதான் தனது துறைகள் குறித்த ஞாபகம் வந்திருக்கிறது. தி.மு.க அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை, ‘வழக்கு தொடருவோம்’ என்ற பூச்சாண்டி காட்டி மிரட்டும் அதே காலாவதியான தொனியில், தமிழக மின்சார வாரியம், அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய தொகை குறித்த கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
