Last Updated:
பிஸ்லரி மீது வழக்கு தொடர FSSAI அனுமதி அளித்திருந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ள பிஸ்லரி நிறுவனம், தங்கள் குடிநீர் பாதுகாப்பானதுதான் என தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் இதுவரை நடந்தவற்றின் முழு விவரம் இங்கே…
இந்தியாவின் முன்னணி குடிநீர் நிறுவனமான பிஸ்லரி மீது வழக்கு தொடர உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள பிஸ்லரி நிறுவனம், தங்கள் குடிநீர் பாதுகாப்பானதுதான் என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக FSSAI (உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) வெளியிட்ட அறிவிப்பில், “பிஸ்லரி நிறுவனத்தின் குடிநீர் மாதிரியை பரிசோதனை செய்ததில் அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட புரோமேட் என்ற வேதியியல் பொருள் அதிகம் கலந்திருப்பது தெரியவந்தது. இது 2006-ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் பாதுகாப்பற்றது” என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் பிஸ்லரி நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அதே மாதிரிகள் உணவு ஆய்வகத்திற்கு அனுப்பட்டதாகவும் அதிலும் பிஸ்லரி நிறுவனத்தின் குடிநீர் பருக உகந்தவை அல்ல என FSSAI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bisleri
இந்த விவகாரம் தொடர்பாக வசந்த் மசாலா பிரைவேட் லிமிடெட், டிட்-பிட் ஃபுட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மிமான்சா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆஷா கன்ஃபெக்ஷனரி ஆகிய நிறுவனங்கள் மீது வழக்கு தொடரவும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் பிஸ்லெரி குடிநீர் முழுமையாகப் பாதுகாப்பானது என்றும், தங்களுக்கு இதுவரை எந்த நோட்டீஸும் வரவில்லை என்றும் அந்நிறுவனம் திட்டவட்டமாக தற்போது விளக்கமளித்துள்ளது.
இந்த விவகாரம் சுமார் 14 மாதங்களுக்கு முன்பு அதாவது 2025 செப்டம்பர் மாதம் கோவா ஆலையில் தயாரிக்கப்பட்ட ஒரு பேட்ச் தொடர்பானது எனத் தெரிவித்துள்ளது. அப்போது சேகரிக்கப்பட்ட 6 மாதிரிகளில் 5 மாதிரிகள் அனைத்துத் தர நிர்ணயங்களுக்கும் உட்பட்டு இருந்ததாகவும், ஆறாவது மாதிரியில் மட்டும் புரோமேட் (Bromate) அளவு சற்று கூடுதலாக (ஒரு லிட்டருக்கு 12 மைக்ரோகிராம்) பதிவாகியிருந்ததாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Breaking News | மினரல் வாட்டரில் அதிக ரசாயனமா?-பிஸ்லரி விளக்கம்
#Bisleri | #MineralWater | #WaterSafety | #DrinkingWater
#BreakingNews #News18TamilNadu #TamilNews https://t.co/uLUfhWRLUB— News18 Tamil Nadu (@News18TamilNadu) November 23, 2026
இதனைத் தொடர்ந்து பிஸ்லெரி நிறுவனம் செய்த மேல்முறையீட்டின் அடிப்படையில், FSSAI பரிந்துரை ஆய்வகத்தில் நடத்தப்பட்ட மறுபரிசோதனையிலும், பிஸ்லெரி மேற்கொண்ட சுயாதீன ஆய்வகப் பரிசோதனையிலும் புரோமேட் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் இருப்பது உறுதியானது. இருப்பினும், பரிந்துரை ஆய்வகச் சோதனையில் பாலிநியூக்ளியர் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) இருப்பதாகத் தனியாகக் குறிப்பிடப்பட்டிருந்ததால், இது குறித்த சுயாதீன ஆய்வக அறிக்கையை 2026 பிப்ரவரி 2-ம் தேதி அதிகாரப்பூர்வக் கடிதத்துடன் FSSAI-யின் மேற்கு மண்டல அலுவலகத்தில் பிஸ்லெரி சமர்ப்பித்தது.
அந்தக் கடிதத்திற்குப் பிறகு FSSAI தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வராததால், இந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டதாகவே தாங்கள் கருதியதாக பிஸ்லெரி தெரிவித்துள்ளது. மேலும், இன்றுவரை மின்னஞ்சல் மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ தங்களுக்கு எந்த நோட்டீஸும் கிடைக்கவில்லை என்றும், FSSAI இணையதளத்திலும் அத்தகைய நோட்டீஸ் எதையும் கண்டறிய முடியவில்லை என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
குடிநீர் பாதுகாப்பே தங்களது முதன்மையான முன்னுரிமை எனக் குறிப்பிட்டுள்ள பிஸ்லெரி, 10-கட்ட உற்பத்திச் செயல்பாட்டில் 90-க்கும் மேற்பட்ட கடுமையான தரப் பரிசோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. முறையான ஒழுங்குமுறை நடைமுறைகள் மூலம் FSSAI அமைப்புடன் தொடர்ந்து ஒத்துழைப்போம் என்றும், மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிஸ்லெரி குடிநீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானதாகவே உள்ளது என்றும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

