Last Updated:
2023 அக்டோபர் 1க்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாஸ்போர்ட் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2023ம் ஆண்டு அக்.,1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள், புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. ‘பாஸ்போர்ட் சட்டம் 1980’ விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் திருத்தம் செய்ததன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, வெளியிடப்பட்ட அறிக்கையில், “2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள், புதிதாக பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், மாநகராட்சி, நகராட்சி அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே சரியான ஆவணமாக ஏற்கப்படும். அரசிதழில் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 2023, அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பு பிறந்தவர்களுக்கு இத்தகைய பிறப்பு சான்றிதழ் தேவை இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அதேநேரம், பள்ளி சான்றிதழ், நிரந்தர கணக்கு அட்டை, ஓய்வூதிய கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்கான பிறந்த தேதிக்கான ஆவணங்களாக பயன்படுத்த முடியும்.
பாஸ்போர்ட் பெறுவதற்கான சட்ட விதிகளில் நீண்ட காலமாகவே எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாமல் இருந்த நிலையில், திருத்தம் மேற்கொள்ள கோரிக்கைகள் எழுந்தன. கிராமங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பெரும்பாலும் பிறப்பு சான்றிதழ் இல்லை என்பதால், எந்த திருத்தமும் செய்யாமல் இருந்த நிலையில், தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 02, 2025 12:21 PM IST

