லக்னோ: 66 ஆண்டு கால அரசியல் வரலாறை கொண்டுள்ள உ.பி., சட்டசபைக்குள் முதன் முறையாக மொபைல்போன் கொண்டு போக தடை விதிக்கப்பட்டுள்ளது.
உ.பி.,சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 28 ம் தேதி முதல் துவங்கி டிச.,1 -ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பெண் எம்.எல்.ஏக்கள் பேசுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். இந்த கருத்திற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தன.
இந்நிலையில் மேற்கண்ட விதிகளுடன் 66 ஆண்டு கால அரசியல் வரலாற்றுடன் தொடர்பு கொண்டுள்ள சட்டசபை விதிகளில் மேலும் சில விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து எம்.எல்.ஏக்கள் அனைவரும் மொபைல் போன் , பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கொண்டு போக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தொடரின் முதல் நாளில் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். 29-ம் தேதி அவசரச்சட்டம் மற்றும் அறிவிப்புகள் தாக்கல் செய்யப்படும். மதியம் நேரத்தில் 2023-24 ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
30ம் தேதி துணை மானியங்கள் மீதான விவாதம் நடத்தப்பட்டு துணை பட்ஜெட் நிறைவேற்றப்படும். டிச.,ஒன்றாம் தேதி சட்டசபை கூட்டம் நிறைவடைகிறது.

