சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது ஆதரவாளர்களை பா.ம.க, எம்.எல்.ஏ அருள் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். இதனிடையே பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பா.ம.க கட்சியின் நிர்வாகி தந்தையின் இறப்பு நிகழ்விற்கு சென்றுவிட்டு வரும் வழியில், சோளகாட்டில் அன்புமணியால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் என்பவர் மற்றும் சடையப்பன் உள்ளிட்ட 15 பேர் திடீரென வந்து தாக்குதல் நடத்தினர். நாங்கள் 25 கார்களில் 150 பேர் சென்றிருந்தோம். அப்போது கல்லால் காரின் மீது தாக்குதல் நடத்தினர். காரை நிறுத்தியபோது, தொடர்ந்து வண்டிகள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டே இருந்தனர். இதற்கான காரணம் என்னவென்றால், சேலத்தில் பொதுக்குழு நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழுவிற்கு வரவேற்பு பிரமாண்டமாக கொடுக்கப்பட்டது. இதற்கு அன்புமணியால் தாங்க முடியவில்லை, இதற்கு யார் காரணம், அருள் என்பதால் அவரைக் கொன்று விடுங்கள் என்று மூன்று பேர் கத்தியுடன், 5 பேர் இரும்பு பைப்புடன், ஐந்து கார்களை அடித்து நொறுக்கி உள்ளனர். என்னை நோக்கி கத்தி எடுத்து வந்து, உன்னை அன்புமணி கொலை செய்ய சொல்லிவிட்டார். அன்புமணி கொலை செய்ய சொன்னார் என்று கத்தி எடுத்துக் கொண்டு என்னை நோக்கி வந்தார்கள். அப்பொழுது என்னுடன் இருந்த நிர்வாகிகள் என்னை காப்பாற்றினார்கள். பெற்றெடுத்த தந்தையையே கொலை செய்ய வேண்டும் என்று செயலாற்றிக் கொண்டிருக்கின்ற அன்புமணி, என்னை கொலை முயற்சி செய்வதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

