Last Updated:
ஜம்மு பிரிவில் சர்தால், பக்கர், தேவி பிண்டி, சேகர் பாபா நீர்வீழ்ச்சி, சுல் பார்க், குல் தண்டா, ஜெய் பள்ளத்தாக்கு, பஞ்சரி போன்ற இடங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அன்று நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் உள்ள சுற்றுலாப் பகுதிகளில் உள்ள பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள மொத்தம் 16 பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் பஹல்காமில் உள்ள பூங்காவும் இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்காக பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், பூங்காக்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும், 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கும் பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உயர் அதிகாரிகளுக்கு மாநிலத்தில் உள்ள 16 பூங்காக்களையும் மீண்டும் திறக்க உத்தரவிட்டார். இவற்றில் 8 இடங்கள் ஜம்முவிலும், 8 இடங்கள் காஷ்மீரிலும் உள்ளன. மீதமுள்ளவை, படிப்படியாக திறக்கப்படும் என்றும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம், பேட்டாப் பள்ளத்தாக்கு, பஹல்காம் சந்தைப் பகுதியில் உள்ள உள்ளூர் பூங்காக்கள், வெரினாக் தோட்டம், கோகர்னாக் தோட்டம் மற்றும் அச்சபால் தோட்டம் போன்ற பூங்காக்கள் திறக்கப்படுகின்றன. மேலும், ஸ்ரீநகரில் உள்ள பதம்வாரி பூங்கா, நிகீன் ஏரிக்கு அருகிலுள்ள வாத்து பூங்கா மற்றும் தர்கா ஹஸ்ரத்பால் அருகே உள்ள தக்தீர் பூங்கா ஆகியவையும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதே நேரத்தில், ஜம்மு பிரிவில் சர்தால், பக்கர், தேவி பிண்டி, சேகர் பாபா நீர்வீழ்ச்சி, சுல் பார்க், குல் தண்டா, ஜெய் பள்ளத்தாக்கு, பஞ்சரி போன்ற இடங்களில் உள்ள சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் பல பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசாங்கத்தின் இந்த முடிவை பல அரசியல் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக்கில் உள்ள பிரபலமான பூங்காவான வெரிநாக்கில் ஏராளமான பள்ளி குழந்தைகள், சுற்றுலாப் பயணிகளை வரவேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு வந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். பூங்காவை மீண்டும் திறந்ததும், எங்களுக்குக் கிடைத்த வரவேற்பும் மிகவும் நன்றாக இருக்கிறது என்று பஞ்சாபின் பாட்டியாலியைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி கூறியுள்ளார்.
பல நாட்களுக்குப் பிறகு இந்தப் பூங்கா திறக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் எங்கள் குடும்பங்களுடன் இங்கு வந்துள்ளோம் என்று ராஜஸ்தானின் பிகானேர் பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான பர்கத் அலி கூறியுள்ளார். இது ஒரு அற்புதமான உணர்வு மற்றும் அனுபவம். பூங்கா மீண்டும் திறக்கப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம், அதனால் தான் நாங்கள் இங்கு வந்தோம். ஆனால், எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு உண்மையிலேயே சிறந்த அனுபவம், அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்று பஞ்சாபிலிருந்து வந்த மற்றொரு சுற்றுலாப் பயணி கூறியுள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ போலீசாரும் பூங்காக்களில் நிறுத்தப்பட்டனர்.
June 20, 2025 7:07 AM IST
பஹல்காம் தாக்குதல்.. ஜம்மு-காஷ்மீரில் மூடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு.. மக்கள் மகிழ்ச்சி!

