
ராஜேஸ்வரி நகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா, நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் அவரது தொகுதியில் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க எம்.எல்.ஏ. முனிரத்னா சென்றார். அப்போது அவர் மீது மர்ம நபர்கள் முட்டையை வீசியுள்ளனர். இதில் ஒரு முட்டை முனிரத்னாவின் தலை மீது விழுந்தது. உடனடியாக அவரை சூழந்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி, கே.சி. பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முட்டை வீசிய விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், மூன்று நபர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மூவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய முனிரத்னா, கொலை செய்யும் நோக்கத்தோடு தன் மீது முட்டை வீசி தாக்குதல் நடந்ததாகவும், அந்த முட்டையில் ஆசிட் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருட்கள் இருந்ததாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஏதும் அசம்பாவிதம் நடந்திருந்தால் அதற்கு, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், அவரது சகோதரர் டி.கே. சுரேஷ், காங்கிரஸ் தலைவர் குசுமா மற்றும் அவரது தந்தை ஹனுமந்தராயப்பா ஆகியோர் தான் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.
பிறகு மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முனிரத்னா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “காவல்துறை பொம்மைப் போல் செயல்படுகிறது. செய்தியாளர் சந்திப்பை நடத்தி விரிவாக இது குறித்து தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஹனுமந்தராயப்பா, “எம்.எல்.ஏ. முனிரத்னா, எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய கீழ்த்தரமானவர். பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியவர் அவர். அந்த வழக்கை திசை திருப்பவே இந்த நாடகத்தை நிகழ்த்தியுள்ளார்.
முன்னதாக வோக்காலிகா சமூதாயத்தைக் குறித்து அவதூறாக பேசி வெளியான ஆடியோவில் இருக்கும் குரல் தன்னுடையது இல்லை என மறுத்தார். பிறகு தடய அறிவியல் ஆய்வகம் அது அவர் குரல் தான் என உறுதி செய்தது. இதன் காரணமாக மக்கள் அவரை நிராகரிக்கத் துவங்கியுள்ளனர். இந்த விவகாரங்களை எல்லாம் திசை திருப்பவே அவர் இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றிவருகிறார்” என்றார்.
கர்நாடகா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான பாஜக தலைவர் ஆர். அசோகா, “இந்த விவகாரத்தை முதலில் போலீஸ் விசாரிக்கட்டும். தொடர்ந்து எங்கள் எம்.எல்.ஏ.க்கள் குறிவைக்கப்படுகிறார்கள். திசை திருப்பும் செயல் நடந்தால் அது விசாரணையில் தெரியவரும். விசாரணைக்கு முன்பே இந்த விவகாரத்தில் கருத்து சொல்வது முறையாக இருக்காது. காங்கிரஸ் தலைவர்களே விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வது என்றால் எதற்கு காவல்துறை” என்று தெரிவித்தார்.
கடந்த ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த முனிரத்னா, திடீரென அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டும் நிலுவையில் உள்ளது. இதுமட்டுமின்றி, சாதி ரீதியாக முனிரத்னா அவதூறாக நடந்துகொண்டதாகவும் அவர் மீது புகார் உள்ளது. இந்த இரு புகாரையும் சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகின்றது.
இதில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு, அக்டோபர் மாதம் ஜாமீனில் வெளியேவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
December 26, 2024 3:41 PM IST
