பெருமாநல்லூர் அருகே காளிபாளையத்தில் பட்டா வழங்கிய இடத்தில் உரிய முறையில் அளவீடு செய்து தரக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் ஒன்றியம், அவிநாசி வட்டம் காளிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வாரணாசி பாளையத்தில் ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதி மக்கள் 27 பேருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்தை உரிய முறையில் அளவீடு செய்து தர வேண்டும் எனக் கோரி ஆதி திராவிட குடியிருப்பு பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் சம்பவ இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி, ஒருவர் காயம்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவிநாசி வருவாய்த்துறையினர், அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் நாங்கள் பயன்படுத்தி வரும் மயானத்திற்கு அருகே பட்டா வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள எரியூட்டு மயானத்திற்கு அருகில் உள்ள மூன்று நபர்களின் பட்டா மட்டும், இடம் மாற்றி, அதே பகுதியில் தெற்கு புறத்தில் வழங்கலாம் என தெரிவித்தனர்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஆதிதிராவிடர் பகுதி மக்கள், தற்போது பட்டா வழங்கப்பட்டுள்ள இடத்திலேயே அளவீடு செய்து குடியேற வழிவகை செய்து தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசால் வழங்கப்பட்ட பட்டா இடத்தில் இருத்தரப்பினர் ஆட்சேபனையால் அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
