இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் மியான்வாலி விமான படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்ததில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 பேர் உயிருடன் பிடிபட்டனர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், இன்று(நவ.,04) அதிகாலை நேரத்தில் மியான்வாலி பயிற்சி விமான படை தளத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 பேர் பிடிபட்டனர்.
இருப்பினும் இந்த தாக்குதலில் அங்கிருந்த 3 விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டது. எந்த விலை கொடுத்தாவது, நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை முற்றிலும் அகற்றுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கைபர் பக்துன்க்வா மற்றும் பாலுசிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

