தில்லியில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், மழைநீரில் இறங்காமல் காரில் ஏறுவதற்காக தனது உதவியாளர்களை தூக்கச் செய்து சென்றுள்ளார் சமாஜவாதி மாநிலங்களவை உறுப்பினர் ராம் கோபால் யாதவ்.
தனது இல்லத்தைச் சுற்றிலும் மழைநீர் தேங்குவதால், அதில் கால் வைக்காமல் காரில் ஏறுவதற்காக தனது இல்லத்தில் பணிபுரிபவர்களை அவர் பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பான விடியோ இணையத்தில் வெளியான நிலையில், பலர் விமர்சித்து வருகின்றனர்.
தில்லியில் கடும் தண்ணீர் பஞ்சம் நீடித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று (ஜூன் 28) காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தில்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி இல்லத்திலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. தில்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், உறுப்பினர்கள் பலரும் தில்லியில் தங்கியுள்ளனர்.
இதனிடையே சசிதரூர் தங்கியிருந்த வீட்டிலும் வெள்ளநீர் சூழ்ந்ததாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
