“ `ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும்தான் இருக்கிறது’ என்கிறாரே மு.க ஸ்டாலின்…”
“தமிழ்நாட்டில் 50 ஆண்டுக்காலமாகத் திராவிடம் ஆள்கிறது. ஆரியம் வீழ்த்தப்பட்டுவிட்டதா… ஆரியத்தை, திராவிடம் வீழ்த்தவும் இல்லை, வீழ்த்தப்போவதும் இல்லை. ஆரியம் என்ன நினைக்கிறதோ அதைச் செயல்படுத்தும் இடத்தில் திராவிடம் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கைத் திட்டம், இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரம், தொழிலாளர் திருத்தச் சட்டம் போன்றவற்றில் ஆரியமும் திராவிடமும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றன. மத்திய அரசு சொன்னதால் சொத்து வரி உயர்ந்துவிட்டதாகச் சொல்கிறார்களே. மத்திய அரசு சொல்கிறது, இவர்கள் செய்கிறார்கள். வீழ்த்தும் சக்தி அல்ல, ஆரியமயத்துக்குத் துணைபோகிறது திராவிடம். இது திராவிட மாடல் அல்ல… ஆரிய மாடல். ஆரியத்தையும் திராவிடத்தையும் வீழ்த்தும் சக்தி தமிழ்த் தேசியமும் தமிழீழமும்தான்.”

“திமுக-வை எதிர்க்கும் அளவுக்கு அதிமுக-வை நாம் தமிழர் எதிர்ப்பதில்லை என்ற குற்றசாட்டு தொடர்ச்சியாக இருக்கிறதே?”
“அ.தி.மு.க-வினர் செய்த ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்போம் எனச் சொன்ன தி.மு.க-வை நோக்கி ஏன் அமைக்கவில்லை எனக் கேள்வி எழுப்புகிறோம், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அருணா ஜெகதீசன் அறிக்கை மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அ.தி.மு.க-வையும் தி.மு.க-வையும் சம அளவில் வைத்து எதிர்க்கிறோம். இரு கட்சிகளும் அகற்றப்படவேண்டியவை என்பதில் தீர்மானமாக இருக்கிறோம்.”

