மலர்க்கொடி வங்கிக் கணக்கிலிருந்துதான் 50 இலட்சம் ரூபாய் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பதாய் போலிஸ் அறிக்கை கூறுகிறது. அதெல்லாம் உண்மைதானா என்பதை நாம் நீதிமன்ற விவாதங்களில் பார்த்துக் கொள்ளலாம். இப்ப மலர்க்கொடி கதையை பார்ப்போம். சினிமாவை விட தூளாய் போகிறது அது. பார்டர் தோட்டம் சேகர் என்பவர் (1991 – 2001) போயஸ் தோட்டத்திற்கு மிக நெருங்கிய நட்பில் இருந்தவர். குறிப்பாக சசிகலா, நடராஜன், தினகரன் ஆகியோருக்கு மிக நெருக்கம். அவருடைய திடீர் வளர்ச்சி அயோத்திகுப்பம் வீரமணி வரை கடுப்புகளை கிளப்பிவிட்டுள்ளது. அவருக்கு அதிமுகவில் பதவியும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிட்டப்போகிறது என்கிற பேச்சு அடிபடவே, அவரை முடித்துவிட வீரமணி இடத்தில் வைத்து திட்டம் தீட்டப்படுகிறது.
ஆனால் அதில் வீரமணியோ, அவருடைய ஆட்களோ நேரடியாகத் தலையிட மாட்டார்கள். டைகர் சிவா என்கிற மயிலை சிவாதான் பார்டர் தோட்டம் சேகரைப் போட தலைமை ஏற்கிறார். சசிகலா – நடராஜனுக்கு சென்னையில் வலதுகை போல விளங்கியதால் தோட்டம் சேகருக்கு மவுசு அதிகரித்து, கட்டப்பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பு, கூலிப்படை என்று பெருகி வாழ்ந்துள்ளார். அன்று அமைச்சராக இருந்த வளர்மதி போன்றோருடன் அவருக்கிருந்த நெருக்கம் பல குட்டித் தாதாக்கள் கண்களை உறுத்தின என்பதை மேலே பார்த்தோம். தோட்டம் சேகரை போடுவது அவ்வளவு எளிதில்லை. குறைந்தபட்சம் இருபது அடியாட்கள் (ஆயுதங்களுடன்) புடைசூழ பவனி வருபவர். 2001. அன்று இராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலத்திலிருந்து அவர் தன் வீட்டுக்கு கிளம்பியபோது அவருடன் இருந்தது நான்கு பேர்கள் மட்டுமே. கிளம்பிய கொஞ்ச நிமிடங்களிலேயே தோட்டம் சேகரின் கார் சுற்றி வளைக்கப்படுகிறது. மயிலை சிவா தலைமையில் வந்த 50 க்கும் மேற்பட்டோர் அவரை குறிவைத்து வெட்டிப் படுகொலை செய்தனர்.

தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி. அவர்களுடைய மகன் அழகுராஜா, வயது 5. அத்தனை பேர் வந்து வெட்டினால் தோட்டம் சேகர் உடல் என்ன கதி ஆகியிருக்கும் ? அதைப் பார்த்து கதறி அழுத மலர்க்கொடி தன் மகனுடைய தலைமீது அடித்து சத்தியம் செய்திருக்கிறார். தன் கணவரின் சாவுக்கு காரணமான அத்தனை பேரையும் நான் அல்லது என் மகன் வளர்ந்து பழி தீர்ப்பான். சும்மா மயானச் சபதம் எடுத்துவிட்டு மலர்க்கொடி அதை மறந்துவிடவில்லை. இதில் அயோத்திகுப்பம் வீரமணி நேரடியாகத் தலையிடாவிட்டாலும் அவருடைய பங்கும் இருந்தது எப்படி தெரியவருகிறது என்றால் ; நம் ஆட்சியிலேயே, நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவனை பட்டப்பகலில், பொதுமக்கள் சூழ இருந்த இடத்தில் வைத்து ஒருத்தன் போடுறான்னா இனி அவன் தேவையா என்று வீரமணியையே திடுக்கென்று என்கவுண்டர் போட்டதால் வெளிப்பட்டது. ஆச்சா ? மலர்க்கொடி, தன் கணவனுடையக் கொலையில் சம்பந்தப்பட்டிருந்த மயிலை சிவாவின் ஆட்கள், சிவாவின் சகோதரர்கள் என பல ரவுடிகளை பழிவாங்கிக் கொண்டே இருந்தார். ஆனால் இடைப்பட்டக் காலத்தில் அதாவது 2001 – 2019, இந்த 18 வருடங்களில் மயிலை சிவா என்கிற டைகர் சிவா பெரிய தாதாவாக வளர்ந்துவிட, அவரை மட்டும் நெருங்க முடியவில்லை.
அதுவரை மயிலை சிவாவுமே மலர்க்கொடி & கோவை பெரிதாகக் கருதாமல் கொசுக்களைப் போலவே பாவித்திருக்கிறார். அவரைச் சுற்றி பெரிய கூட்டம் உருவாகி, போட்டிக்கும் ஆட்கள் இல்லாமல் போய்விட, வளர்ச்சி உச்சத்திற்குப் போய் மிதப்பாகி விட்டது ! ஆனால் A + ரவுடி என்பதால் அடிக்கடி குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு பெரும்பாலும் சிறைவாசம் வாய்த்தது. அங்குதான் அவரைக் கொல்ல தொடர்ந்து முயற்சித்து வரும் மலர்க்கொடியின் பின்னணி அவருக்குத் தெரிந்துள்ளது. தோட்டம் சேகைரைக் கொன்ற போது குழந்தையாக இருந்த அழகுராஜா இன்று வீரியமிக்க வாலிபனாக வளர்ந்திருப்பதும் தெரிந்திருக்கிறது.
இனியும் அவர்களை விட்டால் தன்னை போட்டுவிடுவார்கள் என்று தாம் முந்திக் கொள்ள விரும்பினார் ! 2019. சீன அதிபர் மாமல்லபுரத்தை பார்க்க வரும் நாள். எனவே வடையானும் வேட்டி கட்டி அவருடன் கலந்துலாவுவதாகத் திட்டம். இரண்டு பெரிய தலைகள் சென்னைக்கு வருவதால் பல அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தன. மலர்க்கொடி & அழகுராஜா தோட்டம் சேகர் கொலைக்கு பழிவாங்க பல கொலைகள் செய்திருந்ததால் அவர்கள் மீது ஏகப்பட்ட வழக்குகள். ஒரு வழக்கின் விசாரணைக்காக தாயும் – மகனும் எழும்பூர் நீதிமன்றம் போக வேண்டியிருந்தது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு அல்லவா ? பழிதீர்க்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் இதுபோல பொதுவெளியில் வரும் நாளைத்தான் ஸ்கெட்ச் போடுவார்கள். மயிலை சிவாவும் அதையேச் செய்தார். ஆனால் கடுமையான பாதுகாவல் இருக்கும் போது எளிதாகச் சிக்குவோம் எனத் தெரியுமல்லவா ? சிக்கினா என்ன ?

ரெண்டு மாசம், மூணு மாசம் உள்ள வைக்கப் போறான் ? வச்சுட்டு போட்டும் என்று குதிக்கிறார் சிவா. எழும்பூர் நீதிமன்ற வேலைகளை முடித்து ஓர் ஆட்டோ பாதுகாப்புக்கு வர, இன்னோர் ஆட்டோவில் தாயும், மகனும் கெயிட்டி, காசினோ தியேட்டர்கள் இருக்கும் சாலையில் வந்துக் கொண்டிருந்தனர். போக்குவரத்து நெருக்கடி. சிக்னலுக்காக ஆட்டோக்களும் நின்றன. அவர்களை பின் தொடர்ந்து மூன்று பைக்குகளில் வந்த கொலையாளிகள் தாயும் – மகனுமிருந்த ஆட்டோவைச் சூழ்ந்து, எதையும் கண்டுக்காமல் வெட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால் இதையெல்லாம் எதிர்பார்த்தே மலர்க்கொடி வந்திருந்ததால் அவருடைய பாதுகாப்புக்கு வந்திருந்த ஆட்டோவிலிருந்து ஆட்கள் இறங்கி, நாட்டு வெடிகுண்டுகளை கூலிப்படையினர் மீது எறிய ; அந்த இடமே போர்க்களம் போல புகைமண்டலம் ஆகியுள்ளது. சற்றும் எதிர்பாராத கொலையாளிகள் குழம்பிவிட்டனர்.
ஒரு திசையில் முதுகில் வெட்டப்பட்ட மலர்க்கொடி ஓட, இன்னொரு பக்கம் கையில் வெட்டுப்பட்ட அழகுராஜா ஓடுகிறார். இவர்களின் பாதுகாப்பாக வந்திருந்தவர்களின் கைகளிலும் ஆயுதங்கள். இனி இங்கிருந்தால் நாமே பலியாக நேரிடும் என்றெண்ணி அவர்கள் தப்பிக்கிறார்கள். பொதுமக்கள் கொதித்து விட்டனர். பொது அமைதியைக் குலைத்து, அனைவரையும் உயிர் பயத்தில் ஆட்படுத்திவிட்டதால் அவர்கள் உடனுக்குடன் 100 க்கு டயல் செய்து புகாரளிக்க ; சில மணி நேரங்களுக்குள் அனைத்து குற்றவாளிகளும் வளைக்கப்பட்டனர். மீண்டும் மயிலை சிவா ஜெயிலுக்குள் போனார். போனவர் கொரோனா காலமெல்லாம் முடிந்து 2021 ல் வெளியே வந்திருக்கிறார். இவர்கள் இருவருக்குமே தொடர்பில்லாத அசோக்நகர் ஏரியாவில் ஒரு வேலையாகப் பயணிக்கிறார். அவரைக் கண்காணித்துக் கொண்டிருந்தது அழகுராஜா தலைமையிலான கூலிப்படை. கூலிப்படை என்றும் சொல்லிவிட முடியாது. அதில் பெரும்பாலோர் சிவாவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். அவ்வளவு பெரிய தாதா தொக்காகத் தனியாக சிக்கினார்.
ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த அவரை, அவருடையத் தலை அதாவது முகத்தில் மட்டுமே வெட்டி, அவர் கீழே கூட விழாமல் அப்படியே இருக்க கொல்லப்பட்டிருந்தார் ! ஆனால் அது பெருங்கொடூரப் படுகொலை. இறந்தது மயிலை சிவாதானா என்று கூட அடையாளம் தெரியாத அளவு அவருடைய முகம் கொத்தப்பட்டிருந்தன. பத்து பேரும் ஒரே இடத்தில் வெட்டினார்கள் என்றால் அந்த வஞ்சம் எப்படி தீர்க்கப்பட்டது என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள். மலர்க்கொடி தன் மகனைக் கொண்டே சபதத்தை முடித்தார். இதை வாசித்த உடனே மலர்க்கொடி இன்ஸ்டா ஐடிக்குப் போய் ஃபாலோ செய்ய உங்களைத் தூண்டியிருக்கும் இந்தச் சம்பவம். அவசரப்படாதீங்க. அதன்பின் மலர்க்கொடி புகழ்பெற்றுவிட்டார். வழக்கறிஞராக வேறு ஆகிவிட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு இவர்தான் ஃபைனான்சியர் என்று சந்தேகிக்கிறார்கள். நேற்றுவரை அதிமுகவில்தான் இருந்திருக்கிறார். இப்போதுதான் கட்சி அவரை நீக்கியுள்ளது ! மலர்க்கொடி கதையைக் காட்டிலும் மயிலை சிவா கதைதான் இன்னும் ருசிகரமானது. அதை பின்னொரு நாளில் பார்ப்போம் ! என்ன காமெடின்னு பார்த்தீகன்னா இவனுக செத்த பின் இவங்காளுக, இவங்க ஏரியா ஆளுக அதேமாதிரிதான் கத்தியிருக்காக. எதுமாதிரி ? ஏழைகளின் பாதுகாவலன், பலரைப் படிக்க வச்சாரு, அள்ளி அள்ளி கொடுத்தாரு, எங்கண்ணன் நல்லவன்டா அவரப் போய் … பாவிகளா !


மலர்க்கொடி கைது செய்யப்பட்டு விட்டார் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டு விட்டார்