ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி திருவேங்கடம் மீதான என்கவுண்டர் திமுக அரசின் நாடகம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி திருவேங்கடம், சென்னை – மாதவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
காவல் துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை சிறைவாசி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி? முக்கியமான அரசியல் தலைவரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி? இந்திய அளவிலான கட்சியின் மாநிலத் தலைவரின் படுகொலையைத்தான் தடுக்க முடியவில்லை. குறைந்தப்பட்சம் அதில் சரணடைந்த விசாரணை சிறைவாசியையும் காப்பற்ற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. வன்மையான கண்டனத்துக்குரிய இந்நிகழ்வு திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்குத் திறனற்றதாகியுள்ளது என்பதையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு மோசமாகச் சீரழிந்துள்ளது என்பதையுமே காட்டுகிறது.
உண்மையை மூடி மறைப்பதற்காக காவல் துறையினரே போலியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பல வழக்குகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது விசாரணை சிறைவாசி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிகமாகிறது.
