`மாட்டு கொழுப்பை வைத்து சமையல் எண்ணெயில் கலப்படம்!’
ஆந்திராவில் மாட்டிறைச்சிக்காக கொல்லப்படும் மாடுகளிலிருந்து கொழுப்பை எடுத்து, அதை எண்ணெய்யாக உருக்கி சமையல் எண்ணெயில் கலப்படம் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது என்கிறார்கள். குறிப்பாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி ராம்கிருஷ்ணா நகரில் மாடுகளைக் கடத்தி கொன்று அதன் கொழுப்பு மற்றும் இறைச்சிகள் விற்கப்படுவதை ஆந்திர காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர். சம்மந்தப்படவர்களிடமிருந்து 84 டின்களில் கிலோ கணக்கில் மாட்டு கொழுப்புகளைக் கைப்பற்றினர்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்தபோது, சட்ட விரோதமாக மாடுகளைக் கொன்று, அவற்றின் கொழுப்பிலிருந்து எண்ணெய் தயாரித்து, சமையல் எண்ணெயில் கலப்படம் செய்து வந்தது தெரியவந்தது. மேலும், கைதுசெய்யப்பட்டவர்கள் இந்த கொழுப்பை ராஜமுந்திரி, சமல்கோட் வழியாக வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் -கவுகாத்திக்கும், தமிழ்நாட்டின் சென்னைக்கும் அனுப்பி வைப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் தமிழ்நாட்டிலும் ஸ்வீட் போன்ற உணவுப் பொருட்களில் விலங்குகளின் கொழுப்பு எண்ணெய் கலக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
`விலங்கு கொழுப்பு இனிப்புகள் தமிழ்நாட்டில் இல்லையா?’
இந்தநிலையில், விலங்குகளின் கொழுப்புகள் ஸ்வீட்களில் பயன்படுத்தப்படுவது தொடர்பாக ஊடகங்களில் பேசிய சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார், “விலங்குகளின் கொழுப்பு மூலம் தயாரிக்கப்படும் லட்டுகளின் சுவை, அசல் பசு நெய்யிலிருந்து தயாரிக்கப்படும் லட்டின் சுவையிலிருந்து நிச்சயம் வேறுபட்டிருக்கும். சாப்பிடுவதற்கு முன்பே அவற்றின் வாசனை நமக்குத் தெரிந்துவிடும். அதை அவ்வளவு சுலமாக சாப்பிட்டுவிட முடியாது. எனவே, லட்டு போன்ற இனிப்பு பொருட்களில் விலங்கு கொழுப்புகளை பயன்படுத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், விலங்கு கொழுப்புகளிலிருந்து பெறப்படும் நெய்யை பயன்படுத்தி இனிப்புகள் தயாரிக்கப்பட்டுவருவதாக எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. மேலும், உணவு பாதுகாப்புத்துறையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும்கூட இது உறுதிசெய்யப்படவில்லை.

பொதுவாக, மாட்டு எலும்புகள், கொழுப்புகளை உருக்கி, அதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், நெய்யை உணவுப் பொருட்களில் பயன்படுத்தக் கூடாது. காரணம், விலங்கு கொழுப்புகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஸ்வீட்களை சாப்பிட்டால் இரத்தக் குழாய் அடைப்பு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண் பார்வை இழப்பு, இதயம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கலப்படம் கலந்த உணவுப்பொருட்கள் விற்பனை தொடர்பாக தொடர்ந்து ஆய்வுநடத்தி வருகிறோம்!” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

