கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “காவல்துறையில் 9 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளேன் என்ற அடிப்படையில் டிஐஜி விஜயக்குமார் தற்கொலையில் எனக்கு துக்கம் அதிகம். அவர் மீது அனைத்துத் தரப்பிலும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். காவல்துறை அடிமட்டத்தில் மன அழுத்தம் உச்சக்கட்டமாக உள்ளது.

காவல்துறையை சீரமைக்க வேண்டும். 10,000 காலிப்பணியிடங்கள் தமிழகத்தில் உள்ளன. அந்தப் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் அழுத்தம் குறையும். பணியிடங்களில் அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். பந்தோபஸ்தில் காவல்துறையினருக்கு சிறுநீர் கழிக்கக் கூட வசதி இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை கொடுக்க வேண்டும்.
என்னுடைய 9 ஆண்டு காலம் பணிக்காலத்தில் நான் மொத்தமே 20 நாள்களுக்குக் கீழ் தான் லீவ் எடுத்துள்ளேன். விஜயகுமார் மரணம் தற்கொலையாக இருந்தாலும் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம், உயர் நீதிமன்ற மேற்பார்வையில் இதை விசாரணை செய்ய வேண்டும். அவர் எந்த வழக்குகளை விசாரித்தார், எந்த அதிகாரிகளிடம் எல்லாம் தொலைபேசியில் பேசினார் என விசாரணை செய்ய வேண்டும். அவர் குடும்பத்தில் ஒருவருக்கு குரூப் ஏ அரசு வேலை கொடுக்க வேண்டும்.

விஜயகுமாருக்கு OCD பிரச்னை இருந்ததாக ஏடிஜிபி அருண் கூறியுள்ளார். இறந்தப் பிறகு ஒருவரை கொச்சைப்படுத்துவது சரியல்ல. ஒரு அதிகாரி, இன்னொரு அதிகாரி பற்றி பொத்தாம் பொதுவாக இப்படி சொல்லக்கூடாது. இதை விசாரணைக்குழு தான் சொல்ல வேண்டும்.
அவர்கள் கூறிய தகவல் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. இந்த ஊரில் இதற்கு முன்பு பொறுப்பு அமைச்சராக இருந்தவர் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. எல்லாவற்றையும் முழுமையாக பார்க்க வேண்டும். டிஐஜி போன்ற அதிகாரிக்கு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான அழுத்தம் தான் இருக்க முடியும்.

மனரீதியாக வலிமை இல்லாதவர்கள் எல்லாம் ஐபிஎஸ் ஆக முடியாது. என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, தற்கொலை தூண்டப்பட்டதா, மன அழுத்தம் உள்ளிட்ட அனைத்து காரணங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.” என்றார்.

