`வேறு எந்த நோக்கமும் இல்லை’ – முதல்வர் ஸ்டாலின்
இந்த தீர்மானத்தின் மீதான நிறைவுரை ஆற்றிய முதல்வர் ஸ்டாலின், “சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை என்பது மாபெரும் கொடூரம். அதை யாராலும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இது குறித்து இந்த அவையிலே உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசியிருக்கிறீர்கள். இதை பயன்படுத்தி இந்த ஆட்சி மீது தவறான எண்ணத்தை உருவாக்குவதற்காக ஒரு உறுப்பினர் பேசியிருக்கிறார். யாருக்கு என்ன நோக்கமிருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்பக்கம் நின்று அவருக்கு நியாயத்தைப் பெற்றுத் தரும் நோக்கத்தை தவிர தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை தெளிவாக, உறுதியாக, ஆணித்தரமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

குற்றம் நடந்த பிறகு, ஒருவேளை குற்றவாளி உடனடியாக கைது செய்யாமல் விட்டிருந்தாலோ, அல்லது குற்றவாளியை காப்பாற்ற முயற்சி செய்திருந்தாலோ அரசை நீங்கள் குறை சொல்லலாம். ஆனால், சில மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த பிறகும், குற்றம் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் திரட்டிய பிறகும், அரசை குறை சொல்வது அரசியல் ஆதாயத்திற்கானதே தவிர, உண்மையான அக்கறையோடு செய்யப்படுவதில்லை. 24.12.2024 அன்று பிற்பகல் சென்னை மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மறுநாள் காலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஞானசேகரன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இது காவல்துறை எடுத்த துரிதமான, சரியான நடவடிக்கை.
