கூட்டணி தர்மம் முக்கியம்தான், அதைவிட சுயமரியாதை முக்கியம் என குறிப்பிட்டு கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக கோவை மாவட்ட பாமக செயலாளர் கோவை ராஜ் மற்றும் பாமக மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுதா அறிவித்துள்ளனர்.
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை, நாம்தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால், கோவை விஐபி தொகுதியாக மாறிவிட்டது. இந்த தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் என்று அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை செல்லும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தங்களை அழைப்பதில்லை என்று பாமகவினர் திடீரென புகார் எழுப்பியுள்ளனர். பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், தேர்தல் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பு இல்லாததால் பாமகவினர் அதிருப்தியில் உள்ளனர்.

பாஜக கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பாமக நிறுவனர் ராமதாஸ்.
இந்நிலையில், தேர்தல் பணிகளில் இருந்து வெளியேறுகிறோம் என்றும் வெளிப்படையாக கோவை பாமகவினர் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக, கோவை மாவட்ட பாமக செயலாளர் கோவை ராஜ் மற்றும் பாமக மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுதா இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். அவர்களது சமூகவலைதள பக்கத்தில், ‘கோவை வேட்பாளர் பாமக அலுவலகம் பக்கம் வரவில்லை. வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பாமகவுக்கு அழைப்பும் இல்லை. வேட்புமனு தாக்கலுக்கும், தேர்தல் அலுவலக திறப்பு விழாவிற்கும் பாமகவுக்கு அழைப்பு இல்லை.

கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம்
எந்த ஒரு பிரச்சாரத்திற்கும், தேர்தல் வாக்குறுதி வெளியிடும் நிகழ்ச்சிக்கும் பாமகவுக்கு அழைப்பு இல்லை. கூட்டணி தர்மம் முக்கியம்தான். அதைவிட சுயமரியாதை முக்கியம். கூட்டணி கட்சித் தலைவர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர். கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளில் இருந்து மெளனமாய் வெளியேறுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பால், பாஜக, பாமக கூட்டணி இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இரு கட்சிகளின் தலைமையின் கவனத்துக்கும் சென்றுள்ளது.

அரசியல்வாதிகளுக்கு ஏது சுய மரியாதை