Last Updated:
இந்த போராட்டம் அரசியல் ரீதியானது அல்ல என்றும் ஒருவருக்கு ஒரு வாக்கு என்பதை வலியுறுத்தியே போராடுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வாக்கு திருட்டு விவகாரத்தில் டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற ராகுல் காந்தி உள்ளிட்ட ’இந்தியா’ கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் நடந்த குளறுபடி மற்றும் பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ‘இந்தியா’ கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்த பேரணியில் திமுக, திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட 25 கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர். கனிமொழி, டி.ஆர். பாலு, திருச்சி சிவா, செல்வகணபதி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் ‘வாக்கு திருட்டு’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்றனர்.
பேரணியாக சென்ற எம்.பி.க்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைக் கண்டித்து பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எம்.பி.க்கள் காவல்துறை தடுப்புகளை தாண்டி குதித்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்றதால் பரபரப்பு நிலவியது. அதைத்தொடர்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், கனிமொழி, உள்ளிட்ட ’இந்தியா’ கூட்டணிக் கட்சி எம்.பிக்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். அப்போது திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மிதாலி பாக் மயங்கி விழுந்த நிலையில், ராகுல் காந்தி உள்ளிட்ட சக எம்.பி.க்கள் அவருக்கு உதவினர். பின்னர் எம்.பி.க்கள் அனைவரும் பேருந்தில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
“நாட்டின் முன்பு உண்மை வெளிப்பட்டிருக்கிறது. ஆனால், அது குறித்து ஒன்றிய அரசால் பேச முடியவில்லை. இது அரசியல் போராட்டம் அல்ல, அரசியலமைப்பை காக்கும் போராட்டம். ‘ஒருவருக்கு ஒரு ஓட்டு’ என்ற அடிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்கான போராட்டம் ” என ராகுல் காந்தி தெரிவித்தார்.
Delhi Cantonment,New Delhi,Delhi
August 11, 2025 1:22 PM IST

