Last Updated:
India-Pakistan War | விடுதலையான மசூத் அசாரால் அடுத்த ஆண்டு தொடங்கப்பட்டதுதான் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பு. ஜம்மு காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைப்பதே இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கம்.
கால் நூற்றாண்டுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமதுவின் தளபதி அப்துல் ரவூஃப் அசாரை சிந்தூர் தாக்குதல் மூலம் கொன்று பழி தீர்த்துள்ளது இந்தியா. கந்தஹார் விமான கடத்தலுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?.
1999இல் விமானத்தைக் கடத்தி வைத்துக் கொண்டு இந்திய சிறையில் இருந்த 36 தீவிரவாதிகளை விடுவிக்க வைத்த Most Wanted Terrorist தான் அப்துல் ரவூஃப் அசார். 26 ஆண்டுகளுக்கு பின் இந்தியப் படையால் பழி தீர்க்கப்பட்டுள்ளார். நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு 190 பேருடன் பறந்து கொண்டிருந்தது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம். சரியாக பகல் 6.53 மணிக்கு 5 பயங்கரவாதிகள் விமானத்தை ஹை-ஜாக் செய்து அமிர்தசரஸ், லாகூர், துபாய் என அடுத்தடுத்து கொண்டு சென்று இறுதியில் தலிபான்கள் ஆண்ட ஆப்கானிஸ்தானின் காந்தகாரில் தரை இறக்கினர். இந்த விமானக் கடத்தல் பின்னணியின் மூளையாக செயல்பட்ட தீவிரவாதிதான் அப்துல் ரவூஃப் அசார்.
அப்போது பிணைக்கைதிகளாக உள்ள பயணிகளை விடுவிக்க பேச்சுவார்த்தைக்கு இந்தியா அனுப்பிய குழுவில் இடம்பெற்றிருந்தவர்தான் அப்போது உளவுத்துறை அதிகாரியாக இருந்த அஜித் தோவல். அந்த நேரத்தில் அப்துல் ரவூஃப் அசாருக்கு தெரியாது, 26 ஆண்டுகளுக்கு பின் இதே அஜித் தோவல் முன்னின்று நடத்தப்போகும் அதிரடித் தாக்குதலில் தான் தன் உயிர் போகப் போகிறது என்று.
190 பயணிகளை விடுவிக்க அப்துல் ரவூஃப் அசார் கேட்ட விலை மிக அதிகம். ஆம். அவரது அண்ணன் மசூத் அசாரின் விடுதலை. மாறுவேடத்தில் காஷ்மீரில் தாக்குதல் நடத்த நுழைந்தபோது 1994ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இந்தியச் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருந்தார் மசூத் அசார். வேறு வழியே இல்லாத நிலையில், Masood Azhar, Ahmed Omar Saeed Sheikh மற்றும் Mushtaq Ahmed Zargar உள்பட 36 தீவிரவாதிகளை விடுவித்து பயணிகளை பத்திரமாக மீட்டது அப்போதைய இந்திய அரசு.
விடுதலையான மசூத் அசாரால் அடுத்த ஆண்டு தொடங்கப்பட்டதுதான் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பு. ஜம்மு காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைப்பதே இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கம். 2001இல் இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2002இல் அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பியர்ல் தலை துண்டித்துக் கொலை, 2008இல் மும்பை நகரம் மீது தாக்குதல், 2016இல் காஷ்மீரின் பதான்கோட்டில் 8 பேரை பலி கொண்ட தீவிரவாத தாக்குதல், 2019இல் காஷ்மீரின் புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்களை கொன்ற தாக்குதல் என அத்தனை குற்றச்செயல்களுக்கும் பின்னணியில் இருந்தது இந்த ஜெய்ஸ் இ முகமதுதான்.
2007இல் நெருக்கடி காரணமாக அண்ணன் மசூத் அசார் பாகிஸ்தான் உளவுத்துறை உதவியுடன் தலைமறைவு வாழ்க்கைக்கு சென்ற நிலையில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்திற்கு பொறுப்பேற்று அடுத்தடுத்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார் தம்பி அப்துல் ரவூஃப் அசார். நிதி திரட்டுதல், தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு, ஆயுதப்பயிற்சி மற்றும் தாக்குதல்களை ஒருங்கிணைப்பது என சர்வதேச அளவில் தீவிரமாக செயல்பட்ட அப்துல் ரவூஃப் அசார் ஒரு கட்டத்தில் ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
ஆனாலும் யாரிடமும் சிக்காத அப்துல் ரவூஃப் அசாரை 26 ஆண்டுகளுக்கு பின் இந்தியப் படைகள் பாகிஸ்தானிலேயே வைத்து பழி வாங்கியுள்ளது. அந்நாட்டின் பஞ்சாப்பில் உள்ள பஹவல்பூர் மற்றும் முரித்கே என இரு பகுதிகளில் ஒன்றில் நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
அஜித் தோவல் vs அப்துல் ரவூப் அசார்.. 26 ஆண்டுகளுக்கு பின் நடந்த பழிக்கு பழி சம்பவம்.. தீராத பகைக்கு முடிவு!

