Last Updated:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி, கண்கவர் விமான சாகசங்களுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
பெங்களூருவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூருவில் உள்ள எலகங்கா விமானப்படை மைதானத்தில் ஐந்த நாட்கள் நடைபெறும் 15வது விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். இந்த விழாவில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து விமானங்களும் ஹெலிகாப்டர்களும் வானில் பறந்து பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன. முதலாவதாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல போர் விமானங்கள் விண்ணில் பறந்து சாகசங்களில் ஈடுபட்டன. இதேபோன்று தேஜஸ் விமானம் வானில் தலைகீழாக பறந்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து சுகோய் போர் விமானம் தனது வலிமையை வானில் பறைசாற்றியது. இறுதியாக சூர்ய கிரண் ஏரோபாடிக் குழுவினர் சாகசங்களை நிகழ்த்தினர்.
வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் விமான கண்காட்சியில் இந்தியாவின் வான் வலிமையை உலகுக்கே எடுத்துக் காட்டும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராணுவ மற்றும் சிவில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இடம்பிடித்துள்ளன. விமானங்களுக்கு தேவையான உதிரிப்பாகங்களை தயாரித்து தரும் சிறுகுறு தொழில் நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்களும் இக்கண்காட்சியில் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.
இவைதவிர அமெரிக்க உள்ளிட்ட 78 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
February 11, 2025 6:54 AM IST


