நகரத்தில் PM10 (அதாவது, 10 மைக்ரோமீட்டர்கள் அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்ட துகள்களின்) அளவுகள் அதீத குளிர்காலத்தில் மட்டுமில்லாமல், கோடை மாதங்களிலும் கூட 60 µg/m³ என்கிற தேசிய பாதுகாப்பு வரம்பை தொடர்ந்து மீறியுள்ளதாக, கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், மும்பையின் மலாட் மேற்கு பகுதியில் PM10 அளவுகளில் அதிகரிப்பைப் காண முடிந்தது. அதாவது, இது 154.5 µg/m³ ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு முக்கியமான இடமான சிவாஜி நகர், 2023 இல் ஆபத்தான அளவில் 211.0 µg/m³ ஐப் பதிவு செய்திருந்தது. இதுவே, 2024 இல் 102.2 µg/m³ ஆகக் குறைந்தது, எனினும், இது தேசிய வரம்பை விட 70 சதவீதத்திற்கும் அதிகம். சித்தார்த் நகர்-வொர்லியில், 2021 இல் 57.1 µg/m³ இலிருந்து, 2023 இல் 119.2 µg/m³ ஆக உயர்ந்தும், 2024 இல் 105.1 µg/m³ ஆக சற்று குறைந்தும் இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மாசுபட்ட பிற இடங்களில், சாகலா-அந்தேரி கிழக்கு, குர்லா, தியோனார், வைல் பார்லே மேற்கு மற்றும் மஸ்கான் ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் ஆண்டுதோறும் பாதுகாப்பான அளவை விட அதிகமாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.
“நகரத்தில் PM10 அளவுகள் அதீத குளிர்காலத்தில் மட்டுமல்ல, கோடை மாதங்களிலும் கூட தேசிய பாதுகாப்பு வரம்பான 60 µg/m³ ஐ தொடர்ந்து மீறுகின்றன,” என்று காலநிலை தொழில்நுட்பம் பற்றிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான ரெஸ்பியர் லிவிங் சயின்சஸ் நடத்திய ஆய்வு காட்டுகிறது. மும்பையில் PM10 மாசுபாடு, ஒவ்வொரு பருவத்திலும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்றும், கடந்த நான்கு ஆண்டுகளில் இதில் நிலையான முன்னேற்றம் ஏதும் இல்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. PM10 -இன் குறுகிய கால வெளிப்பாடுகளால், முதன்மையாக ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் (COPD) உள்ளிட்ட சுவாச நோய்கள் மோசமடைய வாய்ப்புள்ளது. இது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும், அவசர பிரிவு சிகிச்சைக்கும் வழிவகுக்கலாம்.
மும்பையின் PM10 ஆண்டு சராசரிகள், 2021 இல் 109.3 µg/m³, ஆகவும், 2022 இல் 119.7 µg/m³ ஆகவும், 2023 இல் 118.6 µg/m³ ஆகவும் மற்றும் 2024 இல் 90.0 µg/m³ ஆகவும் இருந்ததாக ஆய்வு தெரிவித்துள்ளது. “2024 ஆம் ஆண்டில் ஒரு சிறிய சரிவு இருந்தபோதிலும், நகரம் முழுவதும் பாதுகாப்பு வரம்பை விட அதிகமாகவே இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாசு அளவுகள் பொதுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படும் கோடை காலத்தில் கூட, PM10 அளவுகள் ஆபத்தான முறையில் உயர்ந்து வருகின்றன என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.”
“மும்பையில் மாசு குறைந்த பருவம் என்று எதுவும் இல்லை என்பதை இந்த தரவு மிகத் தெளிவாகக் காட்டுகிறது” என்று ரெஸ்பியர் லிவிங் சயின்சஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரோனக் சுதாரியா கூறினார்.
கோடை மாதங்களில் கூட, PM10 அளவுகள் வரம்பை விட பல மடங்கு அதிகமாக உள்ளன. இது நகர்ப்புற திட்டமிடல், உள்கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமலாக்கம் மூலம் நகரம் முழுவதும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. போக்குவரத்து உமிழ்வு, கட்டுப்பாடற்ற கட்டுமான தூசி, துறைமுக மண்டலங்களுக்கு அருகிலுள்ள தொழில்துறை செயல்பாடு மற்றும் போதுமான தூசி கட்டுப்பாட்டு வழிமுறைகள் பின்பற்றப்படாதது ஆகியவை மும்பையின் PM10 அளவி அதிகரிப்பதற்கு முதன்மை காரணமாக இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
கட்டுமான தளங்களில் தூசியை அடக்கும் நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்துதல், பொது போக்குவரத்தை விரிவுபடுத்துதல், மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து மேலாண்மை மற்றும் ஹைப்பர்லோக்கல் நடவடிக்கைகளை இயக்க வார்டு மட்டத்தில் நிகழ்நேர கண்காணிப்பு நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான செயல் திட்டத்தையும் இது வலியுறுத்துகிறது.
காற்றின் தரத்தில் அளவிடக்கூடிய மற்றும் சீரான முன்னேற்றங்களை அடைவதற்கு, நகரத்தின் முதன்மை திட்டமிடல் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு உத்திகளில், சுத்தமான காற்றை பெறுவதற்கான இலக்குகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
Mumbai,Maharashtra
April 22, 2025 3:43 PM IST
டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் பாதுகாப்பு வரம்பை மீறிய காற்று மாசுபாடு – எச்சரிக்கும் ஆய்வு!
