ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வும், போனஸ் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்ததால், கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. இதனால், விமானங்களை இயக்க முடியாமலும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும் தவித்ததால், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, பல்லாயிரம் கோடி ரூபாயை கொடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது.
தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தில் 18,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், ஏர் இந்தியா ஊழியர்களுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊதியத்தை உயர்த்துவதாகவும், டார்கெட்டை எட்டிய விமானிகளுக்கு போனஸ் வழங்குவதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஊதியத்தை உயர்த்துவதாகவும், செயல்திறன் அடிப்படையில் போனஸ் வழங்குவதாகவும், ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த மனிதவள மேலாளர் ரவீந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
2023 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டுமே இந்த ஊதிய உயர்வு மற்றும் போனஸ் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கி 2 ஆண்டுகளுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட முதல் ஊதிய உயர்வு என்பதால், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:
பீலா வெங்கடேசன் அளித்த புகார்… முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் அதிரடி கைது!
குறிப்பாக, முதல் நிலை அதிகாரி முதல் மூத்த கமாண்டர் வரையிலான ஊழியர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவர்களுக்கு ரூ.42,000 முதல் ரூ.1.8 லட்சம் வரை போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை அதிகாரி மற்றும் கேப்டனுக்கு போனஸ் ரூ.60,000, கமாண்டர் மற்றும் சீனியர் கமாண்டர் ஆகியோருக்கு ரூ.1.32 லட்சம் முதல் ரூ.1.8 லட்சம் வரை போனஸ் பெறுகின்றனர்.
.
