Last Updated:
ஏர் இந்தியா, டெல்லி-வாஷிங்டன் நேரடி விமான சேவையை செப்டம்பர் 1 முதல் தற்காலிகமாக நிறுத்துகிறது.
மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, டெல்லி- வாஷிங்டன் இடையேயான நேரடி விமான சேவையை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் உலகம் முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பயணிகள் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் ஏர் இந்தியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, 26 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அதி நவீன இருக்கைகள், பல்வேறு புதிய பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்டவை இதில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, டெல்லி- வாஷிங்டன் இடையேயான நேரடி விமான சேவையை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தவுள்ளது.
ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் முழுப்பணத்தையும் திருப்பியளிக்கவுள்ளதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. டெல்லி-வாஷிங்டன் வழித்தடம், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணிக்கும் பயணிகளுக்கு முக்கியமான ஒரு வழித்தடமாக உள்ளது.
எனவே ஏர் இந்தியாவின் இந்த சேவை நிறுத்தம், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.
August 12, 2025 7:26 AM IST

