இதற்கு உடந்தையாக இருக்கக்கூடிய ஆட்சியர், காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் என அனைவர் மீதும் அ.தி.மு.க ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் திரட்டி வைத்திருக்கிறோம்.
கரூரில் சில அதிகாரிகள் இந்த ஆட்சிக்குக் கைக்கூலியாக இருக்கிறார்கள். காலம் மாற இருக்கிறது, காட்சியும் மாற இருக்கிறது. யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கிறேன். ஒருகாலத்தில் தங்கம், வைர நகைகள், பணம் எனத் திருடுவார்கள். ஆனால், இந்த ஆட்சியில் கிட்னி திருடுகிறார்கள்.
தி.மு.க-வினர் நடத்தும் மருத்துவமனைக்குச் சென்று விட்டு வந்தவர்கள் உடல் உறுப்புகள் இருக்கிறதா என்று ஸ்கேன் செய்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வறுமையின் காரணமாக இருக்கும் ஏழை மக்களுக்கு ஆசை காட்டி, கிட்னியைத் திருடுவது எந்த விதத்தில் நியாயம்? எம்.சாண்ட் குவாரி உரிமையாளர்கள் ஒரு டன்னுக்கு தி.மு.க-விற்கு 100 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு பத்து லட்சம் டன் எடுக்கிறார்கள்.

அப்படியென்றால், 10 கோடி கொடுக்கப்படுகிறது. லஞ்சம் கொடுக்காத குவாரி உரிமையாளர்களை மிரட்டி வாங்குகிறார்கள். தி.மு.க ஆட்சியில் அரிசி, பருப்பு என அனைத்து விலைகளும் விண்ணை முட்டுகிறது. சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என அனைத்தும் உயர்ந்துள்ளன.
அ.தி.மு.க ஆட்சி வந்தவுடன், நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வீட்டுமனை கொடுத்து, அதில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். செந்தில் பாலாஜி போல் நாங்கள் ஏமாற்ற மாட்டோம். தீபாவளி பண்டிகைக்கு அ.தி.மு.க ஆட்சி வந்தவுடன் தாய்மார்களுக்கு சேலை வழங்கப்படும். மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம். Bye Bye ஸ்டாலின்” என்றார்.
