அகமதாபாத் விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சனிக்கிழமை பார்வையிட்டார். ஷக்தி சிங் கோஹில், முகுல் வாஸ்நிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து காயமடைந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் உயிர் தப்பிய விஷ்வாஸ்குமார் ரமேஷையும் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த நேரத்தில் நாங்கள், பலியானோர் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆதரவளிக்க வந்துள்ளோம். விமான விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இது துயரநேரம் என்பதால் விசாரணை குறித்து எதுவும் பேச விரும்பவில்லை.
கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் தகவல்களின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருந்தவர்கள், விமானம் மோதிய மாணவர் விடுதியில் இருந்தவர்கள், அப்பகுதியில் இருந்தவர்கள் என 274 பேர் பலியாகினர்.
