புவனேஸ்வர்: குடும்ப தகராறு காரணமாக, வீட்டிற்குள் தூங்கிக் கொண்டு இருந்த மனைவி, மகளை பாம்பை கடிக்க செய்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தின் அதேய்கோவான் கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் பாத்ரா (25). இவருக்கும், பாசந்தி பாத்ரா(23) என்பவருக்கும் 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2.5 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு, வீட்டின் படுக்கை அறையில் பாசந்தி பாத்ராவும், குழந்தையும் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில் கிடந்தனர். இது தொடர்பாக போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த சம்பவம் நடந்த போது, வேறு அறையில் தூங்கியதாக கணேஷ் பாத்ரா போலீசில் கூறியிருந்தார்.
இந்நிலையில், பாசந்தி பாத்ராவின் தந்தை, தனது மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளது என போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மனைவி மற்றும் குழந்தையை பாம்பை வைத்து கடிக்க செய்து கணேஷ் பாத்ரா கொன்றது தெரியவந்தது. இதற்காக பாம்பு உரிமையாளர் ஒருவரிடம், பூஜை செய்ய வேண்டும் என பொய் சொல்லி விஷப்பாம்பை வாங்கி வந்துள்ளார். அதனை, மனைவி, குழந்தை தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் விட்டதை ஒப்பு கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

