நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர் “த.வெ.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க-வை வெளியேற்றுவீர்களா..? என்ற கேள்விக்கு குறைந்தபட்சம், கூட்டணி வலுவாக இருக்கிறது.. தி.மு.க-வை வீழ்த்தும் நோக்கில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றிருக்க வேண்டும். ஆனால் வெறுமனே ‘உங்கள் யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது.. ‘ என மேலோட்டமாக பதில் சொல்லியிருப்பதில் பல்வேறு அர்த்தங்கள் பொதிந்திருக்கலாம். கூட்டணி ஆட்சி என பா.ஜ.க நெருக்குவதால், கூட்டணியை மறுசீரமைக்கும் பிளான் ‘பி’ பற்றி அ.தி.மு.க யோசிக்கலாம். 11 ஆண்டுகால மத்திய ஆட்சி மீதான அதிருப்திகளை சுமப்பதற்கு பதில், பா.ஜ.க-வை வெறுக்கும் த.வெ.க, வி.சி.க ஆகிய கட்சிகளுக்கு அ.தி.மு.க வலை வீசவும் எடப்பாடி பழனிசாமியிடம் திட்டம் இருக்கலாம்” என்றனர்

நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர் “கடந்த ஏப்ரல் 9-ம் தேதி பா.ஜ.க-வுடனான கூட்டணியை உறுதி செய்தது அ.தி.மு.க. அதற்கு முன்பு நாங்கள் த.வெ.க-வுடன் தீவிர கூட்டணிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தது உண்மைதான். ‘கூட்டணி ஆட்சி’ விவகாரங்களை தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், ஏறக்குறைய 35-40 தொகுதிகள்வரை த.வெ.க-வுக்கு தர எங்கள் பொதுச் செயலாளர் சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், த.வெ.க-வின் கோரிக்கைகளில் அரசியல் அறியாமையே தென்பட்டன. எடுத்த எடுப்பிலேயே ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. பாதிக்கு பாதி தொகுதி.. முதலமைச்சராக சிறிது காலம் விஜய் இருக்கலாமா.. என்றெல்லாம் கோரிக்கைகளை வீசினார்கள். இதனால் டென்ஷனான எடப்பாடி பேச்சுவார்த்தைகளை அத்துடன் முடித்துக் கொள்ளச் சொன்னார். பின்னர் பா.ஜ.க-வுடன் கூட்டணியை உறுதிப்படுத்திவிட்ட இச்சூழலில் பா.ஜ.க இல்லையென்றால் எங்களுடன் இணைய விருப்பம் தெரிவிக்கின்னர். ஆனால், முடிவை காலமும், எடப்பாடியாரும்தான் எடுக்க வேண்டும்” என்றார்.
