ராய்ப்பூர்: ‘ஆதிவாசி’ என்றால் நாட்டின் முதல் உரிமையாளர் என்று அர்த்தம். அதனால், இந்த வார்த்தையை பாஜ., பயன்படுத்துவதில்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசினார்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜகதல்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாவது: ஆதிவாசி என்ற சொல் என்பது புரட்சிகரமான வார்த்தை. ‘ஆதிவாசி’ என்றால் நாட்டின் முதல் உரிமையாளர் . இந்த வார்த்தையை பாஜ., வினர் பயன்படுத்துவதில்லை. காடு, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றை உங்களிடம் திருப்பித் தர வேண்டும்.
‘வனவாசி’ என்ற புதிய வார்த்தையை பா.ஜ.,வினர் கொண்டு வந்துள்ளனர். இதன் அர்த்தம் காட்டில் வசிப்பவர்கள். இந்த வார்த்தை ஆதிவாசிகளை அவமதிக்கும் வார்த்தை. இந்த வார்த்தையை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் ஏற்காது. பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ், பாஜ., தலைவர்கள் ஆதிவாசிகளை வனவாசிகள் என்று அழைக்கின்றனர்.
இரண்டு வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. சில நாட்களுக்கு முன், மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ., தொண்டர் ஒருவர் ‘ஆதிவாசி’ இளைஞர் மீது சிறுநீர் கழித்தார். அவர்களின் சித்தாந்தம் என்ன?.
அனைவருக்கும் ரூ.15 லட்சம் தருவேன். பணமதிப்பிழப்பு மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்படும். ஜி.எஸ்.டி.,யால் இந்தியா மாறும் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. மோடியின் நண்பர் அதானி சத்தீஸ்கரில் ஒரு சுரங்கத் திட்டத்தை வைத்திருந்தார். ஆனால் எங்கள் பழங்குடி சகோதர சகோதரிகள் இந்த திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்று சொன்னார்கள். காங்கிரஸ் அவர்களின் குரலுக்கு மதிப்பளித்து அதானியின் திட்டத்தை ரத்து செய்து காட்டியது. இவ்வாறு ராகுல் பேசினார்.

