Last Updated:
நடிகர் அஜித் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பத்ம பூஷன் விருதை பெற்றார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
சமூகப் பணி, பொது விவகாரம், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன . அதன்படி 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி அறிவிக்க்பட்டது.
அதன்படி 2025 ஆம் ஆண்டு 7 பேர் பத்ம விபூஷண் விருதுக்கும், 19 பேர் பத்ம பூஷண் விருதுக்கும், 113 பேர் பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்வாகினர். தமிழகத்தில் நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி செட்டி ஆகிய மூவரும் பத்ம பூஷண் விருதும், பாரதி ஆய்வாளர் சீனி விஸ்வநாதன் உள்பட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் என மொத்தம் 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகள் மற்றும் சான்றிதழை கொடுத்து கௌரவித்தார்.
அதன்படி நடிகர் அஜித்குமார் பத்ம் பூஷன் விருதை குடியரசு தலைவரிடம் இருந்து பெற்று கொண்டார். நடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் விருது பெற்ற போது அவரது மனைவி ஷாலினி, மகள் மற்றும் மகன் ஆகியோர் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
April 28, 2025 6:22 PM IST

