தங்கள் ஊருக்கு சாலை அமைத்துத் தராததால், அரசியல் கட்சியினர் தங்கள் பகுதிக்கு வாக்குக் கேட்டு வரக்கூடாது எனக் கூறி திமுக பிரச்சார வாகனத்தின் முன்பு மூதாட்டி ஒருவர் தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஏற்காடு சட்டப்பேரவை தொகுதியில் மலை கிராமங்கள் அதிகமாக உள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் மலையரசன், அதிமுக சார்பில் குமரகுரு, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீச பாண்டியன், பாமக சார்பில் தேவதாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஏற்காட்டில் அதிமுகவைச் சேர்ந்த சித்ரா சிட்டிங் எம்எல்ஏ-வாக பதவி வகிக்கிறார்.

சாலைவசதி செய்து தராத அரசியல் கட்சியினர் ஊருக்குள் வாக்கு கேட்டு வர மக்கள் எதிர்ப்பு
ஏற்காடு தொகுதிக்குட்பட்ட மலை கிராமங்களுக்கு போதிய சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்பட வில்லை என்ற குற்றச்சாடு கடந்த பல ஆண்டுகளாகவே உள்ளது. ஏற்காட்டில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொனப்பாடி என்ற கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு பல ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறார்கள். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அந்த மக்கள் அறிவித்துள்ளனர்.

மக்களின் போராட்டத்தால் வாக்கு கேட்காமல் திரும்பச் சென்ற திமுகவினர்
இந்த நிலையில் 9-ம் தேதி இரவு திமுகவினர் சொனப்பாடி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்கச் சென்றனர். அப்போது திமுகவின் பிரச்சார வாகனம் தங்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று சொல்லி ஊர் எல்லையிலேயே பொதுமக்கள் அதனை தடுத்து நிறுத்தினர். அப்போது திடீரென மூதாட்டி ஒருவர் பிரச்சார வாகனத்தின் முன்பாக பாதையில் படுத்து, “போறதா இருந்தா என் பொணத்தை தாண்டி போ” என திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அப்பகுதி மக்களும் திமுகவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பிரச்சாரத்தை தவிர்த்து விட்டு திமுகவினர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். திமுகவினர் மட்டுமின்றி எந்தக் கட்சியை சேர்ந்தவர்களும் தங்கள் பகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வரக்கூடாது என கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


ஊருக்காகவும் ஊர் மக்களுக்காகவும் சாலை மறியல் செய்து போராடிய அந்த பெண்ணின் தைரியத்தையும் பொது நலன் மீதுள்ள அக்கறையையும் பாராட்டுகிறேன்