நடிகர் அதர்வா நடிப்பில் உருவான டிஎன்ஏ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அதர்வாவுக்கும் நிமிஷா சஜனுக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் வாழ்க்கையை அழகாகக் கொண்டு செல்கின்றனர். இடைவேளைக்கு முன் நிமிஷாவுக்குக் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்த சில நிமிடங்களிலேயே மருத்துவமனை ஊழியர்கள், உறவினர்கள் சூழ்ந்திருந்தும் குழந்தை கடத்தப்படுகிறது. அதேநேரம், விஷயம் தெரியாமல் அந்தக் குழந்தைக்கு பதிலாக வேறு ஒரு குழந்தையை நிமிஷாவிடம் கொடுக்கின்றனர். ஆனால், அது தன்னுடையது அல்ல என நிமிஷா உறுதியாகச் சொல்ல, கதை சூடுபிடிக்கிறது. கடத்தப்பட்ட அதர்வா – நிமிஷாவின் குழந்தையைக் கண்டுபிடிக்கிறார்களா? கடத்தல் பின்னனியில் இருந்தது யார்? என்கிற அழுத்தமான கேள்விகளுடன் பரபரப்பான படமாக உருவாகியிருக்கிறது டிஎன்ஏ.
இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் பின்னணியில் இப்படம் உருவானாலும் சில முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது. ஆரம்பக் காட்சிகள் சிறிய ஏமாற்றங்களைக் கொடுத்தாலும் காட்சிகள் நகர ஒரு குழந்தை பேறுக்கு பின் என்னென நிகழ்கிறது; மருத்துவமனையிலிருக்கும் தாயும் சேயும் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என காட்சிகள் விரிய விரிய ஒரு கிரைம், நல்ல திரில்லராக மாறுகிறது. தன் குழந்தையைக் காணவில்லை என அதர்வா தேடும் காட்சிகளில் டுவிஸ்டுகள் அவிழ கிளைமேக்ஸில் இருக்கை நுனிக்கே நம்மை அழைத்துச் செல்கின்றனர். தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த கிரைம் திரில்லர் படங்களில் டிஎன்ஏ-க்கும் இடமுண்டு.
பார்வையாளர்களை ஏமாற்றி வெற்றிபெறும் திரைக்கதையை நம்பாமல் உண்மையாகவே ஒரு குற்றச் செயலுக்குப் பின் எவ்வளவு விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து இப்படத்தின் கதையை உருவாக்கியிருப்பது திரையில் தெரிகிறது. கதை வெறும் குழந்தையைக் காணவில்லை என்பது மட்டுமல்ல.
