India oi-Mathivanan Maran
Published: Wednesday, July 5, 2023, 9:27 [IST]
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாமை தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையடிக்க முயன்ற கும்பலின் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். இந்த மோதலில் வன்முறை கும்பலை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவினரை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் நடத்திய ஒரு போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது. மணிப்பூரில் மைத்தேயி, குக்கி இனக்குழுக்களிடையேயான மோதலாக இது நீடிக்கிறது. இம்மோதலில் இருதரப்பும் ஆயுதங்களை கையில் எடுத்துள்ளன. மணிப்பூரில் முகாமிட்டுள்ள பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை கொள்ளையடித்து இந்த தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர் என்பது குற்றச்சாட்டு. ஆனால் மைத்தேயி இனக் குழுவினருக்கு பாதுகாப்பு படையினரே ஆயுதங்களை கொடுக்கின்றனர் என்பது குக்கி இனக்குழுவினரின் குற்றச்சாட்டு. இப்பின்னணியில் மணிப்பூர் மாநிலம் தெளபால் மாவட்டத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாமை நூற்றுக்கணக்கானர் முற்றுகையிட்டு ஆயுதங்களைக் கொள்ளையடிக்க முயன்றனர். இதனை பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இம்மோதலின் போது வன்முறை கும்பலை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கும்பல் ஒன்று பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை தடுக்க முயற்சித்தது. பாதுகாப்பு படையினரைத் தடுக்கும் வகையில் சாலைகளில் தடுப்புகளை போட்டிருந்தனர். ஆனால் அஸ்ஸாம் ரைபில்ஸ் படையினர், அதிவிரைவுப் படையினர் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு படை முகாமில் இருந்து ஆயுதங்களைக் கொள்ளையடிக்கும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இதில் வன்முறை கும்பலை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மணிப்பூர் போலீசார் வெளியிட்ட செய்தி குறிப்பில், 118 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்ட 326 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என நேற்று தெரிவித்திருக்கிறது. மணிப்பூரில் அமைதியை கொண்டு வருவதற்கு மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்கும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
In Manipur, Security Forces thwart attempt to looting arms and One killed.
Story first published: Wednesday, July 5, 2023, 9:27 [IST]

