சென்னை: வீட்டு வேலைக்கு சென்ற தன்னை எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் கொடூரமாக தாக்கியதாக இளம்பெண் ஒருவர் வேதனை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைக்காக இளம்பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். பணியில் சேர்ந்த இரண்டு நாட்களில், வேலை செட் ஆகவில்லை, என்னால் இவ்வளவு வேலை செய்ய முடியாது என்று கூறி அங்கிருந்து வெளியேற முயன்றிருக்கிறார். ஆனால், கருணாநிதியின் மகனும், மருமகளும் இப்பெண்ணை வெளியேற விடாமல் தொடர்ச்சியாக வேலை வாங்கியதாக தெரிகிறது. இது குறித்து இளம்பெண்ணின் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து MLA கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மெர்லினா மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

