
காதலுக்கு இடையூறாக இருந்ததால் 16 வயது சிறுமி தனது தந்தையைக் காதலனுடன் சேர்ந்து கொலைச் செய்ய திட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும் வேணுகோபால் பாண்டியன் (55) என்பவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் வேணுகோபால் பாண்டியன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, 3 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது.
சந்தேகத்தின் பேரில் பெரியகுளம் தென்கரையை சேர்ந்த முத்துக்காமாட்சி (23), செல்வக்குமார் (23), கண்ணப்பன் (21) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் காதல் விவகாரம் காரணமாக வேணுகோபால் பாண்டியனின் 16 வயது மகளின் தூண்டுதலால் அவரை தாக்கியதாக மூவரும் தெரிவித்த முதற்கட்ட தகவல் அதிர்ச்சியடைய கூறினர்.

காதல் விவகாரம் தொடர்பாக பிரச்சினை எழுந்ததை அடுத்து, வேணுகோபால் பாண்டியனின் மகள் அவரது பாட்டியுடன் தங்கியிருந்தார். அப்போது ஓட்டுநரான முத்துக்காமாட்சி என்பவர் சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இது குறித்து தெரிய வந்த சிறுமியின் தந்தை மகளை கண்டித்துள்ளார்.
எனவே, தொடர்ந்து இடையூறாக இருக்கும் வேணுகோபால் பாண்டியனை கொலை செய்ய சிறுமியின் உதவியுடன் முத்துக்காமாட்சி திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றனர்.
இந்நிலையில், முத்துக்காமாட்சி மற்றும் அவரது நண்பர்கள் மேலும் அவர்களுக்கு உதவியாக இருந்த தனது மகளான 16 வயது சிறுமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உமா மகேஸ்வரி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் சிறுமி உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

